Thursday, November 21, 2024

டாக்டர் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனமும், தயாரிப்பாளர் கொடாப்பாடி J.ராஜேஷ் அவர்களின் K.J.R. Studios நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்க, வினய் ராய் வில்லன் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அர்ச்சனா, தீபா, யோகி பாபு, மிலிந்த் சோமன், அருண் அலெக்ஸாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – அனிருத், ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன், படத் தொகுப்பு – R.நிர்மல், உடைகள் வடிவமைப்பு – பல்லவி சிங், கலை இயக்கம் – D.R.K.கிரண். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநரான நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ராணுவத்தில் மருத்துவராக இருக்கும் நாயகன் சிவகார்த்திகேயன் கொஞ்சம் மூடி டைப். இறுக்கமாக முகத்துடனேயே வாழ்ந்து வருபவர். மூன்று மாதங்களுக்கு முன்பு பிரியங்காவை பெண் பார்த்துவிட்டு ‘ஓகே’ சொல்லியிருக்கிறார்.

பிரியங்காவுக்கும் இவரை முதலில் பிடித்துப் பின்பு பழகத் துவங்கிய பின்பு இந்த உம்மணா மூஞ்சி நமக்கு செட் ஆக மாட்டார் என்பது தெரிய வர.. கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று சிவாவுக்கு வாய்ஸ் மெஸேஜ் போடுகிறார்.

இதைக் கண்ட சிவகார்த்திகேயன் தனது அம்மா, அப்பாவுடன் நியாயம் கேட்டு அவர்கள் வீட்டுக்கு வர.. “இவர் மாதிரியான அசமஞ்சுகளோட குடும்பம் நடத்த முடியாது…” என்கிறார் பிரியங்கா.

இந்த நேரத்தில் பிரியங்காவின் 10 வயது அண்ணன் மகள் காணாமல் போய்விட்ட தகவல் கிடைக்க மொத்தக் குடும்பமும் பரபரக்கிறது. இந்த நேரத்தில் அவர்களுடன் இணைந்து அந்த சிறுமியை தேடத் துவங்குகிறார் சிவகார்த்திகேயன்.

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் லிஸ்ட்டில் இருக்கும் கிங்க்ஸ்லியை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். போலீஸ் விசாரித்தும் பயனில்லை. நாட்கள் நகர்கிறதே தவிர.. சிறுமி கிடைக்கவில்லை.

இதனால் நாமளே குழந்தையைத் தேடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். இதற்காக இவர்கள் போடும் திட்டத்திற்கு கமாண்டராக சிவகார்த்திகேயனே இருக்கிறார். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாடகத்தைத் துவக்குகிறார். இந்த நாடகத்துக்கு கிங்ஸ்லியும் ஒத்துழைப்பு தருவதாக ஒத்துக் கொள்கிறார்.

சிவாவின் ஸ்கெட்ச்படி முதலில் துணை கமிஷனரின் பெண்ணைக் கடத்துகிறார்கள் நாயகியின் குடும்பத்தினர். அதனால் ஊரில் இருக்கும் அத்தனை கடத்தல் குற்றவாளிகளும் போலீஸாரால் பிடிபட்டு மிதிக்கப்படுகிறார்கள். இதில் மூன்று பேரை மட்டும் கிங்ஸ்லி திட்டமிட்டு மேலும், மேலும் அடி வாங்க வைக்க.. அவர்களை மட்டும் கடத்துகிறார்கள் சிவா அண்ட் கோஷ்டி.

அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு கிட்னியை எடுத்துவிட்டதாகப் பொய் சொல்லி சிறுமியைக் கடத்தியது யார் என்று விசாரிக்கிறார்கள். அந்த மூவரில் ஒருவர் உண்மையைச் சொல்ல.. அவர் மூலமாக சிறுமி தற்போது கோவாவில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.

சிறுமியை மீட்க மொத்த மீட்புக் குழுவும் கோவாவுக்கு கிளம்புகிறது. கடைசியில் தங்களது பிள்ளையை மீட்டார்களா…? இல்லையா..? என்பதுதான் இந்த டாக்டர் படத்தின் திரைக்கதை.

சிவகார்த்திகேயனுக்கு நிச்சயமாக இதுவொரு வித்தியாசமான வேடம்தான். அவர் இதுவரையிலும் நடித்திராத புதிய கேரக்டர் ஸ்கெட்ச்சில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். மூடி டைப்.. இறுக்கமான முகம்.. சிரிப்பை கிஞ்சித்தும் காட்டிக் கொள்ளாத தன்மை.. காமெடியைக் கொண்டு வராத கவுண்ட்டர் பேச்சு என்று அனைத்திற்கும் புல் ஸ்டாப் வைத்துவிட்டு இந்தப் படத்தில் நெல்சன் எழுதிய கதாபாத்திரத்தை உள் வாங்கி கச்சிதமாக அதில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

படத்தில் இவருக்கான வசனங்கள் குறைவுதான் என்றாலும் அனைத்தும் ஹீரோயிஸ வசனங்கள் என்பதால் தியேட்டரில் அவரது ரசிகர்களால் ஆராதிக்கப்படுவார்.

சட்டையின் காலர் பட்டனையும் போட்டுக் கொண்டு வந்திருக்கும் சிவகார்த்திகேயனிடம், பிரியங்கா மோகன் “எப்போதுமே இந்த பட்டனை போட்டுக்குவீங்களா..?” என்று கேட்க, “போட்டுக்கத்தானே அதை வச்சிருக்காங்க..?” என்று சிவா சொல்வதிலேயே அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை பதிவு செய்துவிட்டார் இயக்குநர்.

வினய்யிடம் அவர் பிஸினஸ் பேசும் காட்சிகளில் அவருடைய அழுத்தமான நடிப்பு தென்படுகிறது. அவ்வப்போது நாயகியிடம் அவளது எதிர்பார்ப்புகள் அனைத்தும் போலி என்று குத்திக் காட்டிப் பேசும்போது ஆணாதிக்கத்தனமாக இருந்தாலும், அவற்றை அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக நாம் விட்டுவிடலாம்.

“அழகானவங்க முட்டாளாகத்தான் இருப்பாங்க…” என்று சிவாவின் அம்மா ஒரு வசனம் பேசுவார். அதற்கேற்றவாறு இந்தக் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார் நாயகி பிரியங்கா. நேரில் பார்க்கும்போது அத்தனை அழகியில்லை. ஆனால் ஸ்கிரீனில் ஜொலிக்கிறார். அதிலும் குளோஸப் காட்சிகளில் அவருடைய முகமும், கண்களுமே நடிக்கின்றன.

கிளைமாக்ஸ் காட்சியில் யோகிபாபுவை “அண்ணா.. நீங்க அந்தப் பக்கம் போயிட்டு சிவாவை இந்தப் பக்கம் வரச் சொல்லுங்க…” என்று காமெடியே இல்லாமல் சீரியஸாக சொல்லும்போது அதிகமாக சிரிக்க வைத்திருக்கிறார் நாயகி. வெல்டன்.

கிங்ஸ்லியும், யோகிபாபுவும் அடுத்து இந்தப் படத்தில் பாராட்டுக்குரியவர்கள். படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பதும் இவர்கள் இரண்டு பேர்தான். ஒருவருக்கொருவர் கவுண்ட்டர் அட்டாக் வசனத்தை அவ்வப்போது வீசிவிட்டு செல்வதில்தான் தியேட்டர்கள் குலுங்குகின்றன.

இதேபோல் லோக்கல் தாதாவும், அவரது அடியாளாக நடித்தவரும் இன்னொரு பக்கம் இடைவேளைக்குப் பின்பு நம்மை அதிகம் சிரிக்க வைக்கிறார்கள். சிறப்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

நாயகனாக பல படங்களில் நடித்திருந்த வினய் இந்தப் படத்தில் வில்லனாக டீ பிரமோஷன் ஆகியிருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை. ஓடுகிற படத்தில் இருந்தால்போதும் என்று நினைத்துவிட்டார் போலும்..!

வில்லன் கதாபாத்திரத்தை அதற்கேற்றாற்போல் செய்திருக்கிறார் வினய். அவருடைய உயரமும், தோற்றமும் சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமாக இருப்பதால் தேர்வு செய்திருக்கிறார்கள் போலும். அந்தத் தேர்வுக்கு மிகச் சரியான நியாயத்தைத் தனது நடிப்பில் கொடுத்திருக்கிறார் வினய்.

தன் பிள்ளை காணாமல் போன பரிதவிப்பில் அல்லல்படும் அம்மாவாக அர்ச்சனா.. உதவி கேட்டுப் போன இடத்தில் தன்னை சைட் அடிக்கும் தாதாவைப் பார்த்து மிரளும் அந்த ஒரு கணமும் பேசாமலேயே சிரிக்க வைத்துவிட்டார். பிள்ளை மீண்டும் அவர் முன் வந்து நிற்கும் தருணத்தில் அவருடைய நடிப்பும், அழுகையும் படத்தை மீட்டெடுத்துவிட்டது.

அவருடைய கணவராக அருணும், அப்பாவாக இளவரசுவும், வினய்யின் தளபதியாக நடித்து யோகிபாபுவால் அடிபட்டு கட்டை விரலை இழக்கும் நடிகரும்.. சிறப்பு செய்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தீபா தனி மனுஷியாக அதகளம் செய்திருக்கிறார். அவ்வப்போது சிவாவை பொங்கித் தீர்ப்பதும், காமெடியை செய்வதுமாய் வேறொரு தீபாவை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார் நெல்சன்.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு கண்களில் ஒற்றிக் கொள்ளும்படியிருக்கிறது. இதுவொரு தேடுதல் வேட்டை பற்றிய படம் என்பதால் கோவாவின் அழகைப் படமாக்காமல் விட்டுவிட்டார்கள். ஆனாலும், கிளைமாக்ஸில் அந்த போர்ச்சுக்கீசிய கோட்டையின் அழகை மட்டும் அவ்வப்போது காட்டி பிரமிக்க வைத்திருக்கிறார்.

அனிருத்தின் இசையைக் காட்டிலும் பின்னணி இசை அருமை. காமெடி படங்களுக்கே உரித்தான பின்னணி இசையை கச்சிதமாக இதில் அமைத்துக் கொடுத்திருக்கிறார் அனிருத். செல்லம்மா’ பாடல் இனிமேல் கல்யாண கச்சேரிகளில் களை கட்டும்போல தெரிகிறது. ஆனால், முதல் பாடல் வரிகள் என்ன என்பது யாராவது சொன்னால்தான் தெரியும்.

படத் தொகுப்பாளர் ஆர்.நிர்மலின் கச்சிதமான வெட்டுக்களில் படம் விறுவிறுப்பாக, நேரம் போவதே தெரியாத அளவுக்கு செல்கிறது. இதற்காக இவருக்கு ஒரு பாராட்டுக்கள்.

இதுதான் கதை என்று படத்தின் துவக்கத்திலேயே இயக்குநர் சொல்லிவிட்டதால் நாமும் சட்டென்று கதையுடன் ஐக்கியமாக முடிந்திருக்கிறது.

தனது முந்தைய படமான கோலமாவு கோகிலா’ படம் போலவே இந்தப் படத்திலும் ஒரு குடும்பத்தையே கிரைம் கிளப்பாக்கி திரைக்கதையில் விளையாட விட்டிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

படத்தை கடைசிவரையிலும் நகைச்சுவையாக மட்டுமின்றி திரில்லராகவும், விறுவிறுப்பாகவும் கொண்டு சென்றிருக்கிறார். சிறுமியை மீண்டும் குடும்பத்திடம் காட்டும் காட்சியும், வினய் பிரியங்காவை பரிமாற அழைக்கும் காட்சியையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால் கோவாவில் மொத்தக் குடும்பமும் சிறுமி காணாமல் போன சோகம் தெரியாமல் இருப்பதுபோல காட்டப்படுவதுதான் கொஞ்சம் இடிக்கிறது. படத்தில் இடையிடையே பிரியங்காவுக்கு அட்வைஸ் செய்வதுபோல சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் பெண்ணடிமைத்தனத்தைப் போதிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

படத்தில் முதல் அரை மணி நேரம் மெதுவாகத்தான நகர்கிறது. ஆனால் அதன் பின்பு டாப் கியருக்கு செல்லும் படம் கடைசிவரையிலும் அந்த டெம்போவை விட்டுவிடாமல் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.

தான் ஒரு காமெடி நடிகர் அல்ல என்பதை காட்டுவதற்காகவே சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக இது போன்ற சீரியஸ் படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்திலும் அந்தக் குடும்பத்து சிறுமி மட்டுமே கிடைக்கும் சூழல் இருந்தும் கடத்தப்பட்ட அத்தனை பேரும் எனக்கு வேண்டும் என்று சிவா கதாபாத்திரம் சொல்வது அந்த ஹீரோயிஸத்திற்காகத்தான். 

இதேபோல் கடைசியாக ஒரு சிறுமி மாட்டிக் கொண்ட செய்தியறிந்து மீண்டும் அங்கே சென்று வில்லனிடம் சிக்கி மிதிபட்டு ஒரு வழியாக வதம் செய்வதெல்லாம் ஆக்சன் ஹீரோவாக அவரை நிலை நிறுத்தும் செயல்தான்.. நாம் இதனை குறை சொல்ல விரும்பவில்லை.

ஆனாலும் உலகம் முழுவதுமே மிக சீரியஸான குற்றமாகக் கருதப்படும் சிறுமிகள் கடத்தல் குற்றத்தை நகைச்சுவைக் களமாக்கியிருப்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். இன்றைய இளம் இயக்குநர்கள் இப்படித்தான் எல்லாவற்றையும் மிக எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தால் அடு்த்தத் தலைமுறையை நினைத்தால் நமக்கு பயம்தான் வருகிறது.

ஒவ்வொரு படத்திலும் லாஜிக் இடிக்கிறது என்று சொல்லிக் கொண்டேயிருப்போம். ஆனால் இந்தப் படத்தில் மொத்தமாக லாஜிக்கே இல்லை. அதைப் பார்த்தால் சிரிக்க முடியாது. சிரிக்க வேண்டும் என்றால் லாஜிக் பார்க்காதீர்கள்.

இரண்டரை மணி நேரம் கலகலப்பாக்கி வெளியில் அனுப்பும் இந்தப் படத்தைப் பார்த்த விஜய் ரசிகர்களும் இப்போது சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். நிச்சயமாக பீஸ்ட்’ படமும் இப்படித்தான் இருக்கும் என்று அவர்கள் நினைப்பார்களே..!?

அது நிஜமாகட்டும்…!

மதிப்பெண் : 4 / 5

- Advertisement -

Read more

Local News