இயக்குநர் சுசீந்திரன் உதவி இயக்குநர்களுக்கும், நடிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நடிப்பு மற்றும் இயக்குதலில் இணையம் வழியாகப் பயிற்சியளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘ஜீனியஸ்’, ‘கென்னடி கிளப்’, ‘சாம்பியன்’, ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.
தற்போது ‘ஏஞ்செலீனா’, ‘சிவா சிவா’ ஆகிய படங்களும் இவருடைய இயக்கத்தில் உருவாகி வெளியாக தயாராக உள்ளது.
தற்போதைய கொரோனா காலக்கட்டத்தில் கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தை மிக பயனுள்ளதாக ஆக்குவதற்காக இயக்குநர் சுசீந்திரன் ஆசிரியப் பணியை செய்யப் போகிறாராம்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது உதவி இயக்குநர்களாகப் பணியாற்றுபவர்களுக்கும், பணியாற்ற எண்ணியிருப்பவர்களுக்கும், நடிகர்களாகத் துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் ஆன்லைனிலேயே நடிப்புப் பயிற்சியினைத் தரப் போகிறார் இயக்குநர் சுசீந்திரன்.
இந்த ஆன்லைன் நடிப்புப் பயிற்சி வரும் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூன் 25-ம் தேதிவரையிலும் நடைபெறவுள்ளது. தினமும் மாலை 5 மணியில் இருந்து 6.30 மணிவரையிலும் இந்த வகுப்புகள் நடைபெறுமாம். இடையில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்களாகும்.
பயிற்சி முடிந்த அடுத்த நாள் அதாவது ஜூன் 26-ம் தேதியன்று இயக்குநர் சுசீந்திரன் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பாராம்.
இந்த நடிப்புப் பயிற்சி வகுப்பில் சேர கட்டணமாக ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்படுமாம்.
இந்தப் பயிற்சி வகுப்பு நிறைவடைந்ததும் இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் தான் இயக்கப் போகும் அனைத்துப் படங்களிலும் இந்தச் சான்றிதழ் வைத்திருப்போருக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் இயக்குநர் சுசீந்திரன் அறிவித்திருக்கிறார்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகள் வழங்கும் நுழைவுக் கட்டணம் முழுவதும் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.