நடிகர் தனுஷ் இயக்கியும், நடித்துள்ள திரைப்படம் ‛இட்லி கடை’. டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. இதில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது படத்தின் பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில், ‛இட்லி கடை’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதைப் பற்றி பதிவு செய்துள்ளார். அதில் அவர், ‛மற்றொரு தேசிய விருது பெற்றிருக்க வேண்டிய ‛ஆடுகளத்தில்’ நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‛சூதாடி’ பாதியிலேயே நிறுத்தப்பட்டதும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் ஈடு செய்யும் வகையில், தனுஷ் என்னை அழைத்து, ‘இட்லி கடை’ படத்தில் ஒரு சிறிய இட்லி போல கவுரவமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தபோது, மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன். நேற்று டப்பிங் பணிகள் நிறைவு பெற்றன.
இரும்பு போல வலிமை கொண்ட இதயத்துடன், எறும்பு போல உழைப்பில் சுறுசுறுப்பாக, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் பிரகாசிப்பதை ‘இட்லி கடை’ படப்பிடிப்பில் நேரடியாகக் கண்டேன். (அதை நான் மிருனாள் என வாசிக்கச் சொல்லவில்லை; ஏனெனில் அது தான் பிசுபிசுப்பான கிசுகிசுவாக பரவி விட்டதே!) அக்டோபரில் வெந்து விடும்… ஓஹோ, மன்னிக்கவும், வந்து விடும்!’ என்று பதிவு செய்துள்ளார்.