இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தனி ஒருவன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றிபெற்றதையடுத்து, இரண்டாவது பாகமான ‘தனி ஒருவன் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு இந்தப் படத்தைப் பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா இருவரும் கலந்துகொண்டனர். அப்போது ‘தனி ஒருவன் 2’ குறித்து கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த இயக்குநர் மோகன் ராஜா கூறியதாவது: “தனி ஒருவன் 2 திரைப்படத்தை மிகவும் நேசிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. இது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் எப்போதும் இது எங்களுடைய பெருமைக்குரிய படம் என்று கூறுவார். இப்படத்திற்கு தேவையான அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தயாரிப்பு நிறுவனம் சரியான நேரத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியுள்ளது. எனவே, நேரம் சரியாக அமையும்போது இந்தப் படத்தினை தொடங்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.