‘சிவப்பதிகாரம்’ படத்தில் ரகுவரன் நடித்தபோது எத்தனை அர்ப்பணிப்போடு அவர் நடித்தார் என்பதை சமீபத்திய ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் அந்தப் படத்தின் இயக்குநரான கரு.பழனியப்பன்.
“சிவப்பதிகாரம் என்னுடைய இரண்டாவது திரைப்படம். விஷாலின் நடிப்பில் ‘சண்டக்கோழி’ வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற பிறகு அவர் ஒப்பந்தமான முதல் திரைப்படமும் இதுதான்.
இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ் தயாரித்தார். அப்போது அவர் மேலும் 3 படங்களை தயாரித்து வந்ததால் கடைசிக் கட்டத்தில் பண நெருக்கடி ஏற்பட்டு என்னுடைய சிவப்பதிகாரம் திரைப்படம் பாதியில் அப்படியே நின்று போனது. பின்பு மீண்டும் அவர் பண நெருக்கடியில் இருந்து மீண்ட பிறகுதான் அந்தப் படம் துவங்கியது.
இந்தப் படத்தில் ரகுவரன் ஒரு ஆசிரியர் கேரக்டரில் நடித்திருந்தார். மதுரையில் ஷூட்டிங். அன்று காலையில் 7 மணிக்கே நான் படப்பிடிப்புக்குத் தயாராகி ரகுவரனை அழைத்து வரும்படி சொன்னேன். அவர் கேரவனில் இருந்து வெளியில் வர மறுத்துவிட்டார்.
துணை, உதவி, இணை இயக்குநர்கள் என்று வரிசையாக நான் அனுப்பிய அனைவரிடமும் “இதோ வர்றேன்.. கொஞ்ச நேரத்துல வர்றேன்…” என்று சொல்லியே அனுப்பிவிட்டார்.
கடைசியாக நானே அவரைப் பார்க்கச் சென்றேன். “என்ன ஸார் விஷயம்..?” என்று கேட்டேன். அவர் சொன்ன பதில்.. “என் கேரக்டர் எப்படி இருக்கணும்.. எந்த மாதிரி பேசணும்.. எப்படி நடிக்கணும்னு யோசனை பண்ணிட்டிருக்கேன். ஒண்ணும் தோணலை..” என்றார்.
இந்தப் பதிலைக் கேட்டு நான் முதலில் அதிர்ச்சியாகிவிட்டேன். இந்தப் படத்தின் கேரக்டர் ஸ்கெட்ச்சை மனதுக்குள் போட்டு வைத்துக் கொண்டு எப்படி நடிப்பது என்று இவ்வளவு நேரமும் அவர் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது.
“ஸார்.. அதுக்குத்தான் நான் டைரக்டர் இருக்கேன். எப்படி நடிக்கணும்னு சொல்றேன். எப்படி உக்காரணும்ன்னும் சொல்றேன்.. வாங்க”ன்னு சொல்லி அவரை வெளியே அழைத்து வந்தேன்.
அந்தப் படத்தில் அவர் கிளாஸ் ரூமில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் காட்சிகளிலெ்லலாம் அமர்ந்த மாதிரியும் இருக்கும். அமராத மாதிரியும் இருக்கும். ஒரு தனி ஸ்டைல்ல உக்காந்திருப்பார்.. நீங்க படத்தைப் பார்த்தீங்கன்னா தெரியும். அந்தப் படத்தில் நான் என்ன நினைச்சனோ அதைவிட பல மடங்கு நடிப்பைக் கொடுத்தார் ரகுவரன்.
பலரும் சொல்ற மாதிரி ரகுவரனுக்கு நிறைய கெட்டப் பழக்கங்களெல்லாம் இல்லை. குற்றாலத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் நான் பார்த்தவரையிலும் தினமும் இரவில் அவரே சமைப்பார். நானும் அவரது அறைக்கு இரவில் சென்று நிறைய நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். அவர் ஒரு நாளும் லேட்டாகவோ, டென்ஷனாகவோ படப்பிடிப்பில் நடந்து கொண்டதேயில்லை. அவருடன் பணியாற்றியது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது..” என்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.