நடிகை கீதா கைலாசம், ஆரம்பத்தில் நாடக மேடைகளில் நடித்து வந்தவர். பின்னர் ‘கட்டில்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அவர், தற்போது அம்மா கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘இட்லிகடை’ படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், அவர் கதாநாயகியாக நடித்துள்ள புதிய படம் ‘அங்கம்மாள்’. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இதனை இயக்கியிருப்பவர் விபின் ராதாகிருஷ்ணன். கார்த்திகேயன், பெரோஜ்கான், அன்சய் சாமுவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள். ஒளிப்பதிவை அன்சய் சாமுவேல் மேற்கொண்டுள்ளார், இசையமைப்பை முகமட் மக்பூல் மன்சூர் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் சரண், பரணி, தென்றல் ரகுநாதன், முல்லை அரசி, பேபி யாஸ்மின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மும்பை திரைப்பட விழாவில் முதன்முதலில் திரையிடப்பட்ட இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் வெளியிடுகிறது.

