நடிகர் தனுஷின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் மற்றும் பிரபலமான சினிமா தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் யு டியூப் சேனல்கள் மர்ம நபர்களால் திடீரென்று முடக்கப்பட்டுள்ளது.
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார்’, இப்போது படத் தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டாலும், அதன் யூ டியூப் சேனல் மட்டும் தொடர்ந்து இயங்கி வந்தது.
தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடல் பல மில்லியன் வியூஸ்களைக் கடந்து இந்த யூ டியூபில் இன்றும் அசுரத்தனமாக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதனால் மாதந்தோறும் தனுஷின் நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த யு டியூப் சேனலைதான் மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளதாக தனுஷ் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முடக்கப்பட்ட சேனலை வெளிக்கொண்டு வர அதை நிர்வகித்து வரும் தனியார் நிறுவனத்தின் தொழில் நுட்பக் குழு முயன்று வருகிறது. இது குறித்து யூடியூப் இந்திய நிறுவனத்திற்கும் புகார் அளித்துள்ளனர்.
இது போலவே லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் யு டியூப் சேனலும் நேற்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த சேனலை மீட்கும் முயற்சியில் அவர்களது அலுவலகத் தொழில் நுட்ப குழுவினர் மும்முரமாக இயங்கி வருகிறார்கள்.
இந்த இரண்டு சேனல்களுமே நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து முடங்கிவிட்டதால், வேண்டுமென்றே யாரோ திட்டமிட்டு இந்த சேனல்களை முடக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுமே விரைவில் தங்கள் சேனல்களை மீட்டு விடுவோம். ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியையும் விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள்.