“2008-ம் ஆண்டு வெளியான ‘வெள்ளித்திரை’ படத்தில் வடிவேலு நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் தானே நடிப்பதாகச் சொல்லி நடித்துவிட்டதாக” அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேசும்போது, “நான் மோசர்பேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோதுதான் இந்த ‘வெள்ளித்திரை’ படத்தைத் துவக்கினோம். அதுவரையிலும் நாங்கள் சில திரைப்படங்களை வாங்கி விநியோகம் மட்டுமே செய்து கொண்டிருந்தோம்.
இந்த வெள்ளித்திரை படத்தை நடிகர் பிரகாஷ்ராஜின் ‘டூயட் மூவிஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தேன். இந்தப் படம் மலையாளத்தில் மோகன்லால், சீனிவாசன், மீனா நடித்த ‘உதயநானு தாரம்’ என்ற படத்தின் ரீமேக்.

இந்தப் படத்தில் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் வடிவேலுவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் தீர்மானமாக இருந்தேன். ஆனால் திடீரென்று பிரகாஷ்ராஜ் “அந்தக் கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டார்.
நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. அது ஒரு நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் என்பதால் வடிவேலுவுக்கு கச்சிதமாகப் பொருந்தும் என்று நான் நினைத்தேன். இருந்தும் பிரகாஷ்ராஜின் பிடிவாதத்தால் அது முடியாமல் போய்விட்டது.
இதனாலேயே துவக்கத்திலேயே “இந்தப் படத்தின் உருவாக்கத்தில் எனக்கு திருப்தி இருந்தால் மட்டுமே படத்தின் வெளியீடுவரையிலும் மோசர்பேர் தயாரிப்பாளராக இருக்கும். இல்லையென்றால் நீங்கள்தான் உங்களது பொறுப்பில் படத்தை வெளியிட வேண்டும்” என்று சொல்லிவிட்டேன். பிரகாஷ்ராஜூம் இதை ஒத்துக் கொண்டார்.

படம் முடிந்து நான் பிரிவியூ பார்த்தபோதே ‘இந்தப் படம் தேறாது’ என்பதைப் புரிந்து கொண்டேன். மலையாளத்தில் சீனிவாசன் மூலமாக ரசிகர்களுக்குக் கொடுத்திருந்த ஒரு அனுபவம், இதில் மிஸ் ஆயிருந்தது. இதனால் “படம் எனக்குப் பிடிக்கவில்லை” என்று அப்போதே பிரகாஷ்ராஜிடம் சொல்லிவிட்டேன்.
இதற்காக என் மீது மிகவும் கோபப்பட்டார் பிரகாஷ்ராஜ். ஆனாலும், “இது எனது தனிப்பட்ட நிறுவனம் என்றால் நான் இதை ஏற்றுக் கொள்வேன். ஒரு நிறுவனம் என்னை நம்பி பணத்தை முதலீடு செய்திருப்பதால், என்னால் இதனை ஏற்க முடியாது. முன்பு சொன்னதுபோல நீங்களே இந்தப் படத்தை விநியோகம் செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.
பிரகாஷ்ராஜூம் அப்போது மிக பெருந்தன்மையாக.. ஜென்டில்மேனாக நடந்து கொண்டார். நான் கேட்டுக் கொண்டது போலவே அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவுத் தொகையை எங்களது நிறுவனத்திற்குக் கொடுத்துவிட்டு அவரே படத்தை வெளியிட்டார். மிகப் பெரிய தோல்வியானது அந்த ‘வெள்ளித்திரை’ படம். இதனால் பல கோடிகள் நஷ்டப்பட்டார் அவர்.

ஆனாலும் நாங்கள் அடுத்து தயாரித்த ‘அபியும், நானும்’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் முந்தைய கடனுக்காக சில விட்டுக் கொடுத்தல்களை செய்து அவருக்கு உதவிகளைச் செய்தோம்.
‘வெள்ளித்திரை’யில் வடிவேலு நடித்திருந்தால் அதன் ரிசல்ட் வேறாக இருந்திருக்கும் என்று இன்றைக்கும் எனக்குத் தோன்றுகிறது..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.