சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது தெரிந்தது.
இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தியேட்டர்களுக்கு வந்தப் பிரதியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
கதையின்படி விஜய் பணியாற்றும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்த பின்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியான கெளரி ஜி.கிஷனை தோற்றுப் போன மாணவனின் தந்தையின் தூண்டுதலால் சில ரவுடிகள் தாக்குவார்கள். விஜய் அவர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து வெளியேற்றுவார். காவல்துறையும் அவர்களக் கைது செய்யும்.

இதன் பின்பு நடக்கும் ஒரு காட்சிதான் தியேட்டர்களில் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கப்பட்ட காட்சி ஓடிடி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்தக் காட்சிதான் விஜய்-மாளவிகா மோகனன் இடையிலான அறிதலுக்கும், புரிதலுக்கும் இணைப்பான காட்சி. தியேட்டர்களில் இந்தக் காட்சியை நீக்கிவிட்டதால் மாளவிகா மோகனன் விஜய்யை தேடி வந்து பேசும் காட்சியில் லாஜிக்கே இல்லாதது போலவும், உயிர்ப்பே இல்லாததாகவும் இருந்ததது.
நீக்கப்பட்ட இந்தக் காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான வசனங்களாகும். சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகளின்போது பல ஆண்களும், பெண்களும் பேசும் பொதுப்படையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மீதே வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.
“பெண்களின் உடைதான் அவர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது…” என்று ஒரு பெண் பேராசிரியரே சொல்வதும், அதற்கு விஜய் விளக்கம் சொல்வதும் அருமை.
‘மாஸ்டர்’ படத்தில் நீளம் காரணமாக குறைக்கப்பட வேண்டிய பல காட்சிகள் இருக்கும்போது உயிர்த் துடிப்பான இந்தக் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏன் நீக்கினார் என்று தெரியவில்லை..?!