அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தின் கதை விஜயகாந்த் நடித்த ‘பேரரசு’ படத்தின் கதை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என்று இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது, அதில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வித்தியாசமான கோணத்தில் முகம் காட்டியிருந்தார் ஷாருக்கான். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தின் கதை விஜய்காந்த் நடித்த ‘பேரரசு’ திரைப்படத்தின் கதையை தழுவி இருப்பதாக கூறி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

2006-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான ‘பேரரசு’ திரைப்படத்தை ரோஜா காம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்திற்கு மாணிக்கம் நாராயணன் பணம் கொடுத்திருந்தார். ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் தனது பட உரிமைகளை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் விற்றுவிட்டது.
இந்தப் புகார் மீதான விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு மேல் நடத்த தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.