Thursday, April 11, 2024

கோப்ரா – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கணிதத்தில் ஜீனியஸான ஹீரோ சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் களமிறங்கி பல பெரிய புள்ளிகளை படுகொலை செய்கிறார். தடயமே இல்லாமல் நடக்கும் இந்தப் படுகொலைகளை விசாரிக்கும் உலகத்தின் நம்பர் ஒன் விசாரணை அமைப்பான இண்டர்போல் போலீஸூக்கும், அந்தக் கணித மேதமைக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் இந்தக் ‘கோப்ரா’ படம்.

அம்மா, அப்பா இல்லாமல் தனித்து வாழும் ‘மதி’ என்ற விக்ரம் சென்னையில் சிறுவர்களுக்கான இல்லத்தை நடத்தி வருகிறார். நெல்லையில் வசித்து வரும் அவரது கணித ஆசிரியரான கே.எஸ்.ரவிக்குமார் சொல்லும் சில சர்வதேச கொலைகளை கச்சிதமாகச் செய்து வரும் வித்தகர் இவர்.

முதல் கொலையாக ஸ்காட்லாந்து பட்டத்து இளவரசரை அவரது திருமணத்தன்றே சர்ச்சில் வைத்து கொல்கிறார் மதி. இரண்டாவது கொலையாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரை ரஷ்யாவில் கொலை செய்கிறார். மூன்றாவது ஒடிசா மாநில முதல்வர் தனது கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள கோவை வந்திருந்தபோது மதியின் கையால் சாகிறார்.

இந்த மூன்று கொலைகளும் வித்தியாசமான முறையில் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப்பட்டு நடந்திருப்பதாக கணிதத்தில் கில்லாடியான சென்னையை சேர்ந்த மீனாட்சி கோவிந்தராஜ் ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடுகிறார்.

ஸ்காட்லாந்து இளவரசர் கொலையை விசாரிக்கும் இண்டர்போல் போலீஸின் அதிகாரியான இர்பான் பதானிடம் இந்த வழக்கும், மீனாட்சியின் புத்தகமும் வந்து சேர்கிறது.

அடிப்படையில் தமிழரான இர்பான் சென்னை வந்து மீனாட்சியை சந்திக்கிறார். இதற்கிடையில் இண்டர்போல் அமைப்பின் சர்வரையே ஹேக் செய்து வித்தை காட்டும் ஒரு அனாமதேய ஹேக்கர், இந்தப் படுகொலைகளுக்கெல்லாம் புரோக்கராக இருக்கும் சுரேஷ் மேனனை போலீஸிடம் காட்டிக் கொடுக்கிறார்.

இதையடுத்து சுரேஷ் மேனனுக்கு இந்த அஸைன்மெண்ட்டை கொடுத்த தொழிலதிபரான வில்லன் சுரேஷ் மேனனை கடத்தி வந்து கொல்கிறான். அதே சமயம் கே.எஸ்.ரவிக்குமாரை அந்த ஹேக்கர் கடத்தி வைத்துக் கொண்டு மதியை தன்னிடம் வரச் சொல்கிறான்.

விடிந்தால் திருமணம் என்ற நிலைமையில் கேரளாவில் இருந்து ஓடத் துவங்கும் மதி, கே.எஸ்.ரவிக்குமாரை காப்பாற்ற முயல்கிறான். அதே சமயம் அவரைக் கொலை செய்யவும் வில்லனின் ஆட்கள் துரத்துகிறார்கள். கூடவே லோக்கல் போலீஸூடன் இண்டர்போல் போலீஸும் பின்னால் துரத்துகிறது. முடிவு என்ன என்பதுதான் இந்தக் ‘கோப்ரா’ படத்தின் திரைக்கதை.

அப்பாவியான கணக்கு வாத்தியார் அந்நியனாக மாறிய பின்பு, பலவித வேடங்களை புனைந்து பல தேசங்களில் கொலைகளை அலட்சியமாக செய்யும் கொலைகாரன்,  இன்னொரு பக்கம், அமைதியான கதிர் என்ற இளைஞனாக விக்ரமின் நடிப்பு ஆர்வத்துக்கு மெகா தீனியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

படம் நெடுகிலும் தனது ஆக்கிரமிப்பை தனது அனைத்துக் கதாபாத்திரங்கள் வாயிலாகவும் செலுத்தி தனது ரசிகர்களைத் திருப்திப்படு்த்தியிருக்கிறார் விக்ரம்.

விக்ரம் ஏற்றிருக்கும் ஒரு சில வேடங்கள் வெறும் மாறுவேடமாகத் தெரிந்தாலும், தனது உடல் மொழி மூலம் அவற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதே சமயம் சில வேடங்கள் கடந்து போன் பின்புதான் அது விக்ரம் என்பதே நமக்குத் தெரிய வருகிறது.

அம்பியாகவும், அந்நியனாகவும் நடிப்பதெல்லாம் கம்மர் கட் சாப்பிடுவதுபோல விக்ரமுக்கு. இந்தப் படத்திலும் அப்படியொரு காட்சியை போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக் காட்சியில் வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்தக் காட்சியில் விக்ரமோடு இயைந்து நடிப்பின் வீரியத்தைக் காட்டியிருப்பவர் ஆனந்த்ராஜ். தொடர்ந்து இந்தக் குழுவினர் சுற்றிச் சுற்றி வந்து விக்ரமை வார்த்தைகளால் சுளுக்கெடுக்கும் காட்சிதான் படத்தின் ஹைலைட் என்று சொல்ல வேண்டும்.

மதியாகவும், கதிராகவும் மாறி, மாறி இருவரும் பேசும் காட்சிகளில் அன்பையும், பாசத்தையும், பரிவையும் காட்டிவிட்டு வில்லனுடன் பேசும்போது குதர்த்தக்கத்தைக் காட்டிப் பேசி ரசிக்க வைத்திருக்கிறார் விக்ரம்.

நாயகியின் காதலை மறுதலித்து சித்தப் பிரமையில் இருப்பதுபோலவே காட்சிக் கொடுப்பதும், பின்பு காதலை மறக்க முடியாமல் கேரளாவரையிலும் சென்று காதலுக்கு ஒத்துக் கொண்டு கல்யாணத்துக்குக் காத்திருக்கும் அமைதியையும் விக்ரமால் கொடுக்க முடிந்திருக்கிறது.

்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிர்ணாளினி ரவி ஆகிய மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்களும் அளவோடு இருக்கின்றன. மூவரிலும் நடுவாளரான மீனாட்சிக்கு முக்கிய வேடம். கதையோடும், திரைக்கதையோடும் சதிராடும் வேடம். சரளமான பேச்சுடன் நடிப்பையும் கலந்து கொடுத்து மிக எளிதாக நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.

்ரீநிதி கே.ஜி.எஃப்.பில் என்ன செய்தாரோ அதை இங்கே மாற்றிப் பேசுகிறார்.  “என் காதலை ஏற்றுக் கொள் நாதா..” என்று காதலனை இறைஞ்சுவதும், கெஞ்சுவதும், பின்பு மிஞ்சிப் போய் வெறுப்பாய் செல்வதுமாய் கண்ணில் படுகிறார். வெறும் பாடல்கள், மற்றும் காதல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

மிர்ணாளினி ரவி முந்தைய இளம் பருவக் காதலியாக.. வர்க்கத்தை முன் வைத்து காதல் பிரியும்வகையில் சிக்கி மாட்டியவர், குடும்பத்தாராலேயே பழி வாங்கப்பட நம்மிடமிருந்து ஒரு இரங்கலைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றுள்ளார்.

வில்லன் ரோஷன் மேத்யூவுக்குக் குறைவான காட்சிகள்தான் என்றாலும் தான் இருக்கும் காட்சிகளில் பீதியைக் கிளப்புகிறார். யாருக்கும் அஞ்சாத இந்திய தொழிலதிபர் என்பதை இவரது கேரக்டர் ஸ்கெட்ச் பறை சாற்றுகிறது.

வெள்ளித்திரைக்குள் புது வரவாக வந்திருக்கும் கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். முதல் படம் போலவே இல்லாமல்.. பல படங்களில் நடித்தது போன்ற அனுபவ நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவாளர்கள் இருவரும் வர்ண ஜாலங்களைக் காட்டியிருக்கிறார்கள். ஸ்காட்லாந்து சர்ச்சின் பிரம்மாண்டமும், ரஷ்யாவின் மேகம் மூடிய ஐஸ் கட்டிகளாலான ஊரையும் காண்பித்து கொலையைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.

படத்தின் பிரம்மாண்டத்துக்கு ஏற்றாற் போன்ற காட்சியமைப்புகள் வேண்டும் என்பதால் அந்த ரிச்னெஸ்ஸை கடைசிவரையிலும் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் கேமிரா புகுந்து விளையாடும் தன்மையுடன் ஓடியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கெனவே ‘தும்பி துள்ளல்’, ‘அதிரா’ பாடல்கள் ரசிகர்களைத் தொட்டுவிட்டன என்பதாலும் படத்தில் பார்க்கும்போது அதெல்லாம் ஒருவித அந்நியமாக இருக்கின்றன. பின்னணி இசையில் ஒலிக்கும் தீம் மியூசிக்கை ரசிக்கலாம்.

கலை இயக்குநர் பட்ட சிரமம் என்பதை தனியாக புத்தகமாகவே போடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார்கள். உடைகள் வடிவமைப்பும் ஒளியமைப்பும், காட்சிகளுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து ஒரு ஜேம்ஸ்பாண்ட் கதையை நம்முடைய தமிழ் வாழ்வியலுக்கு ஏற்றாற்போல் கொடுக்க முனைந்திருக்கிறார்.

மதி செய்யும் சர்வதேச கொலைகளெல்லாம் நம்மால் நம்ப ஸாரி ஜீரணிக்க முடியாததாகவே இருக்கிறது. அத்தனை லாஜிக் ஓட்டைகள். நம்மூரில் நடக்கும் கதையாகவே எடுத்திருந்தாலும்கூட, சில ஓட்டைகளை அடைத்திருக்கலாம். ஆனால் அயல்நாட்டிலும் நம்மூர் போலவே இருப்பார்கள் என்று நினைத்திருப்பதுதான் வருத்தமான விஷயம்.

சாதாரண பத்திரிகையாளராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் சர்வதேச லெவலில் மாபியா ஆபரேஷன் செய்யும் நபராகக் காட்டி புதுமையைச் செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் எப்படி இவர் மதியுடன் தொடர்பு கொள்கிறார்..? மதி எப்படி ரவிக்குமாரின் ஆர்டர்களை புரிந்து கொள்கிறார்..? என்பதை தெளிவாக வசனத்தின் மூலமாகச் சொல்லியிருக்க வேண்டும். இதைச் செய்யாததுதான் படத்தின் பிரதான குறை.

இரண்டாம் பாதியில் வரும் கதிர்-மதியின் இளம் வயது ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நமது மனதைத் தொடாமலேயே போய்விட்டது சோகம்தான்.

நிறைய ட்விஸ்ட்களை ஆங்காங்கே முடிச்சுக்களாக வைத்திருந்து எல்லாவற்றையும் அவ்வப்போது அவிழ்த்துக் கொண்டே வந்து சுவாரஸ்யத்தைக் கூட்ட முனைந்திருக்கிறார் இயக்குநர்.முதல் பாதி நகர்ந்த அளவுக்கு இரண்டாம் பாதி இல்லாதது படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பின்னடைவு.

மதியும், கதிரும் பேசும்போது இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி பூடகமாகப் பேசிக் கொள்வதுபோல வசனங்களை வைத்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய பேக் டிராப்பாகிவிட்டது. “நீ கதிராகவே இரு. நான் மதியாகவே செத்துப் போகிறேன்” என்று சொல்வது கதிர். கடைசியாக சாவது அப்பாவியான கதிர். கொலையாளி மதி உயிருடன் இருக்கிறார். இதையும் சாதாரண ரசிகர்கள் புரிவதுபோல சொல்லியிருக்க வேண்டும். படத்தின் பல காட்சிகள் மன்மதன்’, ‘தடம்’, ‘பியூட்டிபுல் மைண்ட்’ போன்ற படங்களை நினைவுப்படுத்துகிறது.

படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கு மேலானது என்பதால் கடைசியில் போகப் போக அலுப்பைக் கூட்டிவிட்டது திரைக்கதை. முதல் நாளிலேயே இதைப் புரிந்து கொண்டு 20 நிமிடத்தை கத்தரித்துக் கொடுத்த இயக்குநருக்கு நம் நன்றி.

இயக்குநர் தன்னால் முடிந்ததைத் தந்திருந்தாலும் நடிகராக விக்ரம் தனது ரசிகர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரது நடிப்புக்காகவே இந்தக் ‘கோப்ரா’ படத்தை நிச்சயமாகப் பார்க்கலாம்…!

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News