இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை இது குறித்து இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதுமாக சினிமா தியேட்டர்கள் முழுமையாக மூடப்பட்டன.
பின்பு கொரோனா கொஞ்சம், கொஞ்சமாக குறையத் துவங்கிய நேரத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
தியேட்டர்கள் திறந்தாலும் இதுநாள்வரையிலும் 50 சதவிகிதம்வரையிலும் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த அனுமதியை 100 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் பல்வேறு வகைகளில் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து இந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சினிமா தியேட்டர்களில் 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று அனுமதியளித்தது.
இந்த அனுமதியை அடுத்து மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை இன்று இது குறித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.

இதன்படி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே நேரம் தியேட்டர்களின் உள்ளே 100 சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அனுமதி உத்தரவு எந்த நாளில் இருந்து அமலாகும் என்பது அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.