தமிழ்ச் சினிமாவில் முன்னணி பி.ஆர்.ஓ.-க்களில் ஒருவரான நிகில் முருகன் பவுடர் படத்தில் ஒரு நடிகராக அறிமுகமாகுகிறார்.
இந்தப் படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இவர்களுடன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பி.ஆர்.ஓ. நிகில் முருகன்.
நிகில் முருகனின் கதாபாத்திரம் குறித்து படத்தின் இயக்குநரான விஜய் ஸ்ரீஜி பேசும்போது, “நிகில் முருகனை நமது தமிழ்த் திரையுலகம் 25 ஆண்டு காலமாக சிறந்த பி.ஆர்.ஓ.வாக அறியும். முன்னணி சினிமா பி.ஆர்.ஓ.வுக்கே உரித்தான பாணியில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் அவரை, இந்த லாக் டவுன் நேரத்தில் நான் பயன்படுத்திக் கொண்டேன்.

முதலில், இந்த ஸ்க்ரிப்ட்டுடன் நான் அவரை அணுகியபோது, ‘எனக்கு நடிப்பதில் விருப்பம்தான். ஆனால் பி.ஆர்.ஓ. வேலை இருக்கிறதே..’ என்று தயங்கினார். அதன் பின்னர் சில சுற்று பேச்சுவார்த்தைகளில் உடன்பட்டு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் சம்மதித்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.
சினிமாவில் பொதுவாக இந்த ஆர்டிஸ்ட் இந்த கேரக்டர்தான் என்று பொருத்தி வைத்திருப்பார்கள். அந்த வரையறைகளை உடைத்து வெற்றி காண்பதே எனது பாணி மற்றும் இலக்கு.
எனது முதல் படத்தில் சாருஹாசன் சாரை ஒரு டானாக அறிமுகப்படுத்தினேன். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதேபோல், எனது ‘பப்ஜி’ படத்தில் ஐஸ்வர்யா தத்தாவை முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன்.
10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஜனகராஜை மக்கள் மத்தியில் தாதா -87 படம் மூலம் மீண்டும் கொண்டு சேர்த்தேன்.
இந்த வரிசையில் இப்போது, தமிழ்த் திரையுலகினரால் பி.ஆர்.ஓ.-வாக மட்டுமே அறியப்பட்ட நிகில் முருகனை, மக்கள் முன்னால் நடிகராக களமிறக்கிவுள்ளேன். இதில், நிச்சயம் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
படத்தில் நிகில் முருகனின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ராகவன்’. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் பெயர் இதுதான் என்பதாலேயே, வலிமை பெற்ற அந்தப் பெயரை இந்தப் ‘பவுடர்’ படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன்.
ராகவன் கேரக்டரில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பையர் ஆனதால் அதே பெயரை இந்தக் கதாபாத்திரத்துக்குக் கொடுத்துள்ளேன்.
படத்தில் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்த நாள் முதலே நிகில் முருகன் நடிப்புப் பயிற்சி, உடற்பயிற்சி என தன்னை தகுதிப்படுத்திக் கொண்டார். உடலை கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் வலிமையாக்கி திரையில் சிறப்பாகப் பொருந்தியுள்ளார். அவரது குரல் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு ப்ளஸ் என்றே சொல்வேன்.
நிகில் முருகன் பங்குபெறும் காட்சிகள் பெரும்பாலனவை, தீவிர லாக்டவுனுக்குப் பின்னர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியபோதே முடித்துவிட்டோம். நாயகி வித்யா பிரதீப்புடனான காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டும்.
வாய்ப்புகள் நம்மைத் தேடி வரும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சான்றோர் சொல்வார்கள். நிகில் முருகன் அதை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்…” என்றார்.
ஒளிப்பதிவு – ஆர்.பி.ராஜா பாண்டி, இசை – லீயாண்டர் லீ மார்ட்டி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விஜய்ஶ்ரீஜி.
ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் 2021-ம் ஆண்டில் ‘பவுடர்’ திரையில் வெளியாகவுள்ளது.