Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

சினிமா வரலாறு-84 – காற்றோடு கலந்துவிட்ட கனவுக் கன்னி ஸ்ரீதேவி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து  மொழிப் படங்களிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த ஸ்ரீதேவி, சினிமா பார்ப்பதையே அதிகம் விரும்பாத பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திரை உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டவர்.

ஐம்பது ஆண்டுகளில் முன்னூறு திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன். தாய் ராஜேஸ்வரி. காங்கிரஸ் இயக்கத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஐயப்பன் பெருந்தலைவர் காமராஜரை சநதிக்க அடிக்கடி அவரது இல்லத்துக்குச்  செல்வார்.

ஒரு முறை அவர் காமராஜரைச்  சந்திக்கச் சென்றபோது  தனது நான்கு வயது மகளான ஸ்ரீதேவியையும் தன்னுடன் அவர் அழைத்துக் சென்றிருந்தார். அப்போது கவிஞர் கண்ணதாசனும் காமராஜர் வீட்டுக்கு வந்திருந்தார். சிறுமி ஸ்ரீதேவியின் சுறுசுறுப்பைப்  பார்த்த பெருந்தலைவர் “இந்தச்  சிறுமியை நீ சினிமாவில் அறிமுகப்படுத்தலாமே” என்று கண்ணதாசனிடம் கூறினார்.

அந்த நேரத்தில் ‘துணைவன்’ என்ற பக்திப் படத்தை ஆரம்பித்திருந்த சின்னப்பா தேவர் அந்தப் படத்தில் முருகனாக நடிக்க அழகான தோற்றமுள்ள ஒரு சிறுவனைத் தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் ஸ்ரீதேவியை பற்றி கண்ணதாசன் சொல்ல ‘துணைவன்’ படத்தில் பாலமுருகனாக அறிமுகமானார் ஸ்ரீதேவி.

அதற்குப் பிறகு எல்லா தென்னிந்திய மொழிப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி ‘ராணி மேரா நாம்’ என்ற படத்தின் மூலம் இந்திப் படவுலகில் குழந்தை நட்சத்திரமாகக்  கால் பதித்தார்.

ஸ்ரீதேவிக்குப் பதின்மூன்று வயதானபோது அவரை தனது ‘மூன்று முடிச்சு’  படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு சிற்றன்னையாக அவரை நடிக்க வைத்தார்.  அந்த மூன்று முடிச்சு படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவிஆகிய மூன்று உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த முதல் படமாக அமைந்தது.

அந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘16 வயதினிலே’ படமும்,  காமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் அவர் நடித்த ‘மூன்றாம் பிறை’ படமும், இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் அவர் நடித்த ‘ஜானி’ திரைப்படமும் அவரது வாழ்க்கையில் திருப்புமுனைப் படங்களாக அமைந்தன.

‘மூன்று முடிச்சு’ படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்குத் தரப்பட்ட  சம்பளம் முப்பதாயிரம் ரூபாய். எனக்கு சம்பளம் ஐயாயிரம் ரூபாய். ரஜினிகாந்துக்கு மூவாயிரம் ரூபாய். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய தாயாரிடம் மிகவும் நெருக்கமாக ரஜினி பழகுவார். என்னுடைய தாயாரும் தன்னுடைய மகன் போல அவர் மீது பாசத்தைப் பொழிவார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது  ரஜினியின் ஒரே லட்சியம் நாம் எப்போது கமல்ஹாசன் போல பெரிய நடிகராக வந்து முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவது என்பதாகத்தான் இருந்தது.

“நீ நிச்சயமாக பெரிய நடிகனாக வருவாய். முப்பதாயிரம் என்ன.. அதற்கும் மேலாக சம்பளம் வாங்குவாய்” என்று என்னுடைய அம்மா அவருக்கு ஆறுதல் கூறுவார்” என்று ‘மூன்று முடிச்சு’ பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ரீதேவி.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி அதற்குப் பின்னால் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர்கள் கமல்ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே. அது தவிர வேறு சில ஒற்றுமைகளும் அவர்களுக்கு உண்டு. இருவருமே திரையுலகில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்த சாதனையாளர்கள்.

ஸ்ரீதேவி  கதாநாயகியாக திரையுலகில் அடி எடுத்து வைத்தபோது ஜமுனா, காஞ்சனா, மஞ்சுளா, லதா, சந்திரகலா, ஜெயப்பிரதா, மாதவி, ஜெயசுதா, ஜெயசித்ரா என்று எண்ணற்ற நடிகைகள் கதாநாயகிகளாக இருந்தனர்.

அவர்களோடு போட்டி போட்டு வென்றது மட்டுமின்றி  அவர்களை அடுத்து திரையுலகில் அடி எடுத்து வைத்த அம்பிகா, ராதா, சுகாசினி, ராதிகா, ரதி அக்னிஹோத்ரி, விஜயசாந்தி ஆகியோருடனும் போட்டி போட்டு ஜெயித்தவர் ஸ்ரீதேவி.

ஏ.நாகேஸ்வரராவோடு இணைந்து நடித்துவிட்டு அவரது மகன் நாகார்ஜுனாவிற்கும்   ஜோடியாக நடித்த பெருமையும் அவருக்கு உண்டு.

குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி ‘கவரிமான்’ படத்தில் அவரது மகளாக நடித்தார். பின்னர் ‘சந்திப்பு’ படத்திலே அவருக்கு ஜோடியானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி மலையாளத்தில் மட்டுமே குறைவான படங்களில் நடித்துள்ளார்.

1960-களில் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் ஜோடியாக எண்ணற்ற படங்களில் நடித்த சரோஜாதேவியைப் போல ரஜினி, கமல் ஆகிய இருவரின் படங்களிலும் மாறி மாறி நடித்த ஸ்ரீதேவி தமிழ்ப் பட உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்துவிட்டு இந்திப்பட உலகில் அடி எடுத்து வைத்தார்.

ஸ்ரீதேவியைப்போல தமிழ்ப் பட உலகிலிருந்து இந்திப் பட உலகிற்கு எண்ணற்ற நடிகைகள் சென்றிருக்கிறார்கள் என்றாலும் இந்தித்  திரை ரசிகர்களின் பாராட்டுக்களைப பெற்று அங்கு நிலைத்து நின்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

தென்னகத்திலிருந்து இந்திக்குச் சென்று சாதனை படைத்த வைஜயந்திமாலா, பத்மினி, ரேகா, ஹேமமாலினி ஆகியோரைத் தொடர்ந்து 1983-ம் ஆண்டில் பிரபல தெலுங்கு பட இயக்குநரான ராகவேந்திரராவ் இயக்கிய ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தின் மூலம் இந்தித் திரைப்பட ரசிகர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்தவர் ஸ்ரீதேவி.

அவர் இந்தியில் நடித்த முதல் படமான ‘சோல்வா சாவன்’  மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்தது. ’16 வயதினிலே’ படத்தின் இந்திப் பதிப்பான  அந்தப் படம்தான் பாரதிராஜா, ஸ்ரீதேவி இருவருக்குமே முதல் இந்திப் படம்.

1979-ல் இந்தித் திரையுலகில் தோல்வி கண்ட ஸ்ரீதேவி, சரியாக அதற்கடுத்த நான்கே ஆண்டுகளில் ‘ஹிம்மத்வாலா’ படத்தின் மூலம் இந்திப் பட உலகின் கனவுக் கன்னி ஆனார். ஜிதேந்திராவுடன் 16 திரைப்ப்டங்களில் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி இந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் தொடங்கி எல்லா இந்திப் பட கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்தவர்.

சிறு வயது முதலே சினிமாவில் இருந்தாலும் ஸ்ரீதேவியைப் பற்றி கிசு கிசுக்களே வந்ததில்லை. அந்த அளவு கட்டுப்பாடாக தன்னுடைய தாயார் ராஜேஸ்வரியின் கண்ணசைவிற்கு ஏற்ப வாழ்ந்தவர். ஸ்ரீதேவி.விழாக்களில் அவரை சந்திக்கும் மற்ற நடிகைகள் “இன்னிக்கு இந்த டிரஸ்ஸைத்தான் போடணும்னு உங்க அம்மா சொன்னாங்களா” என்றெல்லாம்கூட அவர் அணிந்து வரும்  உடையைப் பற்றி கிண்டல் செய்ததுண்டு. “ஆமாம்.. இது அம்மா எடுத்துக் கொடுத்த உடைதான்” என்று அவர்களுக்கு பளிச் என்று பதில் சொல்வார் ஸ்ரீதேவி. தாயாரின் கட்டுப்பாட்டில்தான் நானிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள  ஸ்ரீதேவி எப்போதுமே தயங்கியதில்லை.

இரும்பு மலராக இருந்த ஸ்ரீதேவியின் வாழ்வில் இரு முறை காதல் வந்தது. அவரது முதல் காதல் ‘ஜானி’ படத்தில் அவர் நடிக்கும்போது வந்தது. அவருக்கு யாருடன்  காதல் பிறந்தது என்பதைப் பற்றி ஸ்ரீதேவியின் பெயரைச்  சொல்லாமல் ‘தினத்தந்தி’ பத்திரிகையில் வெளிவந்த ஒரு பேட்டியில் இயக்குநர் மகேந்திரன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

“ரஜினி உச்சக்கட்டப் புகழை அடைந்திருந்தபோது அவரைத் திருமணம் செய்ய பல நடிகைகள் தயாராக இருந்தார்கள். ரஜினி ஒரு நடிகையை விரும்பினார். அந்த நடிகைக்கும் ரஜினி மேல் விருப்பம். ஒரு நாள் படப்பிடிப்பு நேரத்தில் “அந்த நடிகையைத் திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறேன். உங்கள் கருத்து என்ன?” என்று என்னிடம் கேட்டார்.

“அந்தப் பொண்ணு உங்க மனைவியாக அமைந்தால் நீங்க ரெண்டு பேருமே நல்லா இருப்பீங்க” என்று சொன்னேன். அன்று அந்த நடிகையின் வீட்டு கிரகப் பிரவேசம். ரஜினியையும் என்னையும் இரவு எட்டு மணிக்கு வரச் சொல்லியிருந்தார் அந்த நடிகை. நாங்கள் இருவரும் போனபோது வாசலுக்கு வந்து எங்களை வரவேற்ற அவர் தன்னுடைய அம்மாவை அழைக்க வீட்டுக்கு உள்ளே போனார்.

”நடிகையின் அம்மா வந்தவுடன் கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கலாமா?” என்று என்னிடம் ரஜினி  கேட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் “கட்” ஆனது. நீண்ட நேரம் மின்சாரம் வரவில்லை.

மீண்டும் வெளிச்சம் வந்த நேரத்தில் ரஜினியின் மனம் மாறி இருந்தது. மின்சாரம் போனதை சகுனத்  தடையாக அவர் நினைத்துவிட்டதால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை…” என்று குறிப்பிட்டிருக்கிறார் மகேந்திரன்.

அந்தக் காதல் தோல்வியைத் தொடர்ந்து  நீண்ட இடைவெளிக்குப் பின்னால் இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மீது ஸ்ரீதேவிக்குக்  காதல் பிறந்தது. மூன்று ஆண்டுகள் அவரோடு இணைந்து வாழ்ந்த ஸ்ரீதேவி தனது முதல் மனைவியான யோகிதா பாலியை மிதுன் விவாகரத்து செய்யத் தயாராக இல்லை என்பது தெரிந்ததும் மிகுந்த அதிர்ச்சியோடு அவரை விட்டு விலகினார்.

பின்னர் 1996-ல் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் அண்ணனுமான போனி கபூரைத் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி, அதன் பிறகு திரையுலகைவிட்டு விலகினார். இவருக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்த தமிழ்ப் படமாக விஜய் கதாநாயகனாக நடித்த ‘புலி’ படம் அமைந்தது.

ஸ்ரீதேவி நடித்த முதல் திரைப்படமான  ‘துணைவன்’ 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்திலே வெளியானது. அவர் நடித்த  கடைசி படமான ‘மாம்’ திரைப்படமும் அதே ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியானதை ஒரு விசேஷ ஒற்றுமை என்றுதான் சொல்ல வேண்டும்.

இயற்கையை வெல்ல முடியாது என்ற நியதி காரணமாக  அவர் இறந்துவிட்டார் என்றாலும் திரைப்பட ரசிகர்கள் மனதில் அவர் என்றும் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News