Friday, November 22, 2024

சினிமா வரலாறு-27 இளையராஜாவை பஞ்சு அருணாச்சலத்துக்கு அறிமுகப்படுத்திய கதாசிரியர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய  பஞ்சு அருணாச்சலத்துக்கு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் கதாசிரியரான ஆர்.செல்வராஜ் என்பது எல்லோரும் அறிந்த ஒரு செய்தி.

ஆனால், இளையராஜா செல்வராஜிற்கு எங்கே எப்படி அறிமுகமானார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை

கம்யுனிஸ்ட் கட்சித்  தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவின் சகோதரர் மகன்தான் கதாசிரியர் ஆர்.செல்வராஜ்.1970-களில் கம்யுனிஸ்ட் கட்சியின் எல்லா பொதுக் கூட்டங்களிலும் பாவலர் வரதராஜனின் இசைக் கச்சேரி தவறாமல் இடம் பெறும். அந்த இசைக் குழுவில் பாவலரின் சகோதரர்களான பாஸ்கர், ராஜா, அமர்சிங் ஆகிய மூவரும் இடம் பெற்றிருந்தனர்.

மதுரையிலே அப்படிப்பட்ட கச்சேரிகள் நடக்கும்போதெல்லாம் மங்கம்மா சத்திரத்தில்தான் தங்குவார் பாவலர் வரதராஜன் . அப்போது மதுரையில் தங்கியிருந்த ஆர்.செல்வராஜ் முதன்முதலாக மங்கம்மா சத்திரத்தில்தான் ராஜாவை சந்தித்தார்.

அந்த சந்திப்பை, இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு செல்வராஜ்தான் ஒரு கருவியாக இருக்கப் போகிறார் என்பதால் காலம் ஏற்படுத்திய ஒரு  சந்திப்பு என்றுதான் கொள்ளவேண்டும். இல்லையென்றால் முதல் சந்திப்பிலேயே அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கமாகி இருக்க வாய்ப்பில்லை.

தன் நண்பனான செல்வராஜிற்கு தனது சகோதரர்களான பாஸ்கர், அமர்சிங் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஜா. அதைத்  தொடர்ந்து அந்தச் சகோதர்கள் எப்போது மதுரை வந்தாலும் தவறாது செல்வராஜை சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

இதற்குப் பிறகு ஒரு கால கட்டத்தில் சென்னை நோக்கி நகர்ந்த  ஆர்.செல்வராஜ் பலத்த போராட்டங்களுக்குப் பிறகு கதாசிரியர் பாலமுருகனிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

ஆர்.செல்வராஜைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு தன் 26-ம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் ராஜா சென்னைக்கு வந்தபோது அவரது இன்னொரு நெருங்கிய நண்பரான பாரதிராஜா சினிமாவில் சேர தீவிர முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இசையமைப்பாளராக வேண்டுமென்றால் கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதாது என்று ராஜாவுக்கே தோன்றியதோ இல்லை யாராவது அறிவுறுத்தினார்களோ தெரியவில்லை.

அப்போது மைலாப்பூரில் இருந்த தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிய இளையராஜா, கருவியையும், கிடார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார். பின்னர் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரியில் கிளாசிகல் கிடார்  தேர்வில் தங்கப் பதக்கம் வென்றார்.

சென்னையிலே பாரதிராஜாவின்  நாடகம் தவிர மற்ற நாடகக் குழுக்களிலும் கிடார் வாசித்துக் கொண்டிருந்த ராஜாவிற்கு இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி அவர்களோடும், ஜி.கே.வெங்கடேஷ் அவர்களோடும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற  கனவை சுமந்து கொண்டிருக்கும்  தனது தம்பியை எப்படியாவது இசையமைப்பாளராக ஆக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்த பாஸ்கர், தினமும் காலை முதல் மாலைவரை கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.

பாஸ்கரோடு இணைந்து இளையராஜாவிற்கு வாய்ப்பு தேடுகின்ற பணியில் அப்போது ஆர். செல்வராஜும் முழு மூச்சோடு செயல்பட்டார்.

பஞ்சு அருணாச்சலம் ஒரு நாள் ஆர்.செல்வராஜிடம் பேசிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைக்கக் கூடிய ஒரு திறமையான இசையமைப்பாளரை  அறிமுகப்படுத்த வேண்டும் என்ற தனது ஆசையை அவரிடம்  வெளிப்படுத்தினார்.

அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தானே செல்வராஜ் காத்திருந்தார். ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான். ராஜான்னு பேரு. சின்ன வயசுல இருந்தே ஹார்மோனியம் வாசிச்சுப் பழக்கப்பட்டவன். அவங்க அண்ணன்  பாவலர் வரதராஜனோடு சேர்ந்து நிறைய ஊர்கள்ல கச்சேரிகள் பண்ணியிருக்கான்.

இப்போ இசையமைப்பாளர்  ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கான். அவன் போட்ட பல டியூன்களை நான் கேட்டிருக்கேன். அற்புதமாக டியூன் போடுவான்.  அவனுக்குப் எப்படியாவது இசையமைப்பாளர் ஆகணும்கிறதுதான்  லட்சியம். உங்களுக்கு ஓ.கே-ன்னா சொல்லுங்க    நாளைக்கே நான் அவனைக்  கூட்டிக்கிட்டு  வர்றேன்…” என்றார் செல்வராஜ்.

பல ஊர்ல கச்சேரி பண்ணியிருக்கான். நாடகங்களுக்கு மியூஸிக் போட்டது மட்டுமில்லாமல், இசையமைப்பாளர்  ஜி.கே.வெங்கடேஷ்கிட்ட உதவியாளராகவும் இருக்கான்னா நிச்சயமா ரசிகர்களின் பல்ஸ் தெரிஞ்சவனாகத்தான் இருப்பான் என்று  மனதுக்குள்ளேயே ஒரு  கணக்குப் போட்ட பஞ்சு அருணாச்சலம், “சரி நாளைக்கு அவனை  கூட்டிகிட்டு வா…” என்றார்.

அன்று இரவு முழுவதும்  செல்வராஜ் சொன்ன அந்த இசையமைப்பாளரைப் பற்றிய நினைவு  பஞ்சு அருணாச்சலத்தை சுற்றிச் சுற்றி வந்தது. ஏற்கனவே தமிழிற்கு அவர் அழைத்து வந்திருந்த விஜய பாஸ்கர் என்ற கன்னட இசையமைப்பாளர் வெற்றி பெற்றிருந்ததால் தான் அடுத்து அறிமுகப்படுத்தப்போகும் இசையமைப்பாளரும் மிகப் பெரிய அளவிலே ஜெயிப்பார் என்ற நம்பிக்கையுடன் அன்று இரவு தூங்கினார் பஞ்சு.

மறுநாள் மாலையில்  பஞ்சு அருணாச்சலம் தங்கியிருந்த கிளப் ஹவுசுக்கு ராஜாவை அழைத்து வந்த செல்வராஜ் “அண்ணே… இவர்தான் நான் சொன்ன ராஜா” என்று அறிமுகப்படுத்திவைத்தார். ஷர்ட்டை  இன்  பண்ணிக் கொண்டு  ஒல்லியான தேகத்துடன் நின்ற ராஜாவைப் பார்த்ததும் பஞ்சு முதல் நாள் இரவு கண்ட கனவுக் கோட்டை முற்றிலுமாக தகர்ந்தது.

தழையத் தழையக் கட்டிய வேட்டியும், நெற்றி நிறைய விபூதி குங்குமமுமாக இசையமைப்பாளர்களைப் பார்த்துப்  பழகிய அவரது கண்களால்  கவர்மென்ட் ஆபீஸ் குமாஸ்தாபோல இருந்த அந்த இளைஞனை, இசையமைப்பாளர் என்று  கொஞ்சமும்  ஏற்றுக் கொள்ள  முடியவில்லை.

ஹார்மோனியம், கிடார் என கையில் ஏதாவது ஒரு இசைக் கருவியை ராஜா எடுத்து வந்திருந்தால்கூட அவர் மீது பஞ்சு அருணாச்சலத்திற்கு  லேசான நம்பிக்கை  பிறந்திருக்கும். ஆனால், ராஜா அதையும் செய்யவில்லை..

செல்வராஜ் நம்மை இப்படி கவுத்து விட்டாரே என்ற எண்ணம் மனதுக்குள் இருந்தாலும் தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ராஜாவை உடகாரச் சொன்னார் பஞ்சு அருணாச்சலம்.

லேசான ஒரு சிரிப்புடன் ராஜா அமைதியாக உட்கார “செல்வராஜ் அடிக்கடி உன்னைப் பற்றி சொல்லிக்கிட்டே இருப்பாரு. தமிழ்ல ஒரு நல்ல இசையமைப்பாளரைக் கொண்டு வரணும்னு எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை” என்று பஞ்சு அருணாச்சலம் சொன்னவுடன் அதுவரை பேசாமல் இருந்த ராஜா “சினிமாவுக்கு இசையமைக்கணும் என்கிற ஆசையுடன்தான் நான் சென்னைக்கே வந்தேன். பல மாதங்களாக அதுக்காக  முயற்சிபண்ணிட்டிருக்கேன்.  பாவலர்கூட பல வருஷம் இருந்ததாலே ஓரளவுக்கு இசையைப் பற்றி தெரியும். நிறையப் பாட்டுக்கு டியூன் எல்லாம்கூட போட்டு வெச்சிருக்கேன்…” என்றார்.

 “அப்படீன்னா சரி… அந்த ட்யூனை எல்லாம் நான் கேட்டுடறேன். அப்புறம் என்ன செய்யலாம்னு ஒரு முடிவு எடுப்போம். இரண்டு நாள் கழித்து வாங்க. வரும்போது மற்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கறவங்களையும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க…” என்றார் பஞ்சு அருணாச்சலம்.

“இவனே ரொம்ப நல்லா பாடுவான். பாடிக் காட்ட சொல்லவா…?” என்று பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்டார் ஆர்.செல்வராஜ். ‘சரி’ என்பதற்கு அடையாளமாக பஞ்சு அருணாச்சலம் தலையை ஆட்ட தான் அமர்ந்திருந்த  டேபிள் மீது  தாளம் போட்டபடி பாட ஆரம்பித்தார் ராஜா.

தமிழ்த் திரையுலகில் தனது அரங்கேற்றம்  நடைபெறுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிதான்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தமிழ் சினிமா உலகை தனது இசைத் திறனால்  இன்றுவரை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்ற அந்த இசை வேந்தனுக்கு அன்று  தெரியாது.

‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே…’, ‘மச்சானைப் பாத்தீங்களா..?’, ஆகிய இரண்டு பாடல்களின் மெட்டுக்களை ராஜா பாடிக் காட்டியவுடனேயே  ராஜா எப்படிப்பட்ட திறமைசாலி என்று பஞ்சு அருணாச்சலத்திற்கு  புரிந்துவிட்டது.

ராஜா பாடிய பாடல்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலம் ராஜாவிடம் பாடல்கள் நன்றாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை.. நன்றாக இல்லை என்றும் சொல்லவில்லை.

ராஜாவைப் பொறுத்தவரை இது அவருக்கு புது அனுபவமில்லை. பல பட நிறுவனங்களில் இதைவிட மோசமானஅனுபவங்களை அவர் சந்தித்திருக்கிறார் என்பதால் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார் அவர்.

அதற்குப் பிறகு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் அவருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது பற்றியும், அதற்குப் பிறகும் எப்படிப்பட்ட போராட்டங்களை எல்லாம் முதல் படத்தில் இளையராஜா சந்திக்க வேண்டி இருந்தது என்பது குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்..!  

- Advertisement -

Read more

Local News