Friday, November 22, 2024

சினிமா வரலாறு-10 – எம்.ஜி.ஆரை கண் கலங்க வைத்த கதை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாடலாசிரியரான  மருதகாசி  ‘அல்லி பெற்ற பிள்ளை’ என்ற பெயரில்  தயாரித்த  சொந்தப் படம் தோல்வியடைந்ததால் , பெரும் நஷ்டத்திற்கு உள்ளானார்.

மருதகாசிக்கு உதவுவதற்காக  அவருக்குத்  தன்னுடைய கதை ஒன்றை படமாக்கக்  கொடுத்தார்  கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கே.எஸ்.ஜி. கொடுத்த கதையின் பெயர் ‘தூண்டாமணி விளக்கு.’ 

கே.எஸ்.ஜி.யின் கதையை வாங்கிப் படித்த மருதகாசி,  அந்தக் கதையை 
திரைப்படமாக ஆக்கினால் நிச்சயமாக அது வெற்றி பெறும் என்று திடமாக எண்ணினார்.

அந்த படத்தின் கதை வசனத்தையும்  கே.எஸ்.ஜி.யே  எழுத வேண்டும் என்று மருதகாசி கேட்டுக் கொள்ள அதற்கும் கே.எஸ். ஜி. சம்மதித்ததைத் தொடர்ந்து அந்த படத்துக்கு  பூஜை போடப்பட்டது.

சிவாஜி கணேசன், சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.ஏ.அசோகன் ஆகிய பிரபலமான நட்சத்திரங்கள் அந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்றாலும் மருதகாசி பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததால்  அந்தப் படத்தை அவரால் தொடர முடியவில்லை.

அந்த  சந்தர்ப்பத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்  நெருங்கிய நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆர், தனக்கு ஒரு படம் நடித்துத் தர சம்மதித்திருப்பதாகவும் அதற்கு ஒரு கதையைத் தர முடியுமா என்றும் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார்.

“எம் ஜி ஆர் எப்போது கதை கேட்கிறார் என்று கேட்டுக் கொண்டு வாருங்கள். நான் வந்து கதை சொல்கிறேன்” என்று அவருக்கு பதிலளித்தார்  கோபாலகிருஷ்ணன்.

“உங்களை உடனே எம்.ஜி.ஆர். அழைத்து வரச் சொன்னார்..” என்று அன்று மாலையே அந்த நண்பர் வந்து நிற்க இருவரும் எம் ஜி ஆரின் வீட்டுக்கு புறப்பட்டனர்.

எம்.ஜி.ஆரோடு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நாடக காலத்திலேயே நல்ல பழக்கம் இருந்ததால் காரைவிட்டு இறங்கிய கோபாலகிருஷ்ணனை சிரித்தபடியே அவர்  வரவேற்றார்.

சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்து நின்று போன ‘தூண்டாமணி விளக்கு’ கதையை சிறு, சிறு மாற்றங்களுடன் எம். ஜி. ஆருக்கு சொன்னார் கோபாலகிருஷ்ணன். எம்.ஜி.ஆருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்துப் போனதைத் தொடந்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு உடனே  தொடங்கியது.

சிவாஜி நடிப்பதாக இருந்து படப்பிடிப்பிற்கு முன்னரே நின்று போன அந்தப் படம், எம்.ஜி. ஆர். நடித்து இரண்டு நாள் படப்பிடிப்பு நடந்த பிறகு நின்று போனது.

அந்தக் கதையை சில மாதங்களுக்குப் பிறகு ‘கற்பகம்’ என்ற பெயரில் சொந்தமாக எடுத்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அப்போது அதில் கதாநாயகனாக நடித்தவர் ஜெமினி கணேசன்.

எம். ஜி.ஆர். நடிப்பதாக இருந்த அந்தப் படம் நின்றதற்கான காரணம் என்ன..?

‘கற்பகம்’ படத்தின் கதையை காட்சிவாரியாக எம்.ஜி.ஆரு.க்கு விளக்கினார் கோபாலகிருஷ்ணன். கதாநாயகனின் முதல் மனைவியான கற்பகத்தின் குடும்பப் பாங்கு, தான் பெறாத குழந்தையிடம் அவள் காட்டும் எல்லையற்ற பாசம், பின்னர் அவள் காலமான பிறகு இரண்டாம் தாரமாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி மாமனாரே வற்புறுத்தும்போது முதல் மனைவியை மறக்க முடியாமல் கணவன் படும் வேதனை ஆகியவற்றை கோபாலகிருஷ்ணன் விவரித்தபோது எம்.ஜி.ஆரின் கண்கள் அவரையும் அறியாமல் கலங்கின.

தனது உள்ளத்து உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு முன்னால் வெளிக்காட்ட விரும்பாமல் அடுத்த அறைக்கு சென்று விட்டார் அவர்.

“உங்கள் கதையைக் கேட்டவுடன் அவருக்கு காலம் சென்ற அவரது முதல் மனைவியின் நினைவு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்” என்று கோபாலகிருஷ்ணனிடம் தயாரிப்பாளரான அந்த  நண்பர் கூறிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்டபடியே அறையில் இருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர். “அவர் சொல்வது உண்மைதான்” என்று சொல்லிவிட்டு ”படத்தின் பிற்பகுதியை நான் பின்னால் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு முன் மாமனாரின் வற்புறுத்தலுக்கு இணங்கி கதாநாயகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டானா இல்லையா அதை மட்டும் சொல்” என்று கோபாலகிருஷ்ணனிடம் கேட்டார்.

“தன்னைப் பெற்ற தாயாகவே தனது முதல் மனைவியை நினைத்து வந்த கதாநாயகன் குழந்தையின் ஏக்கத்தை போக்குவதற்காக இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறான். இரண்டாவது மனைவியும் கற்பகம் காட்டிய தாய் அன்பிற்கு தான் சளைத்தவள் அல்ல என்கின்ற அளவிற்கு அந்தக் குழந்தையின் மீது அன்பு காட்டுகிறாள். அதைப் பார்த்தபிறகே அவளை நாயகன் திருமணம் செய்து கொள்கிறான்” என்று கோபாலகிருஷ்ணன் சொல்லி முடித்ததும் “அருமையான கதை” என்று பாராட்டிய எம் ஜி ஆர் “உடனே இதற்கு வசனம் எழுதி விடு” என்றார்.

அப்போது  அடுத்த வாரமே படப்பிடிப்பை ஆரம்பித்தால்தான் தனக்கு பைனான்ஸ் கிடைப்பது எளிதாக இருக்கும் என்று அந்தத் தயாரிப்பாளர் கூற சிறிது  நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். பின்னர்  கோபாலகிருஷ்ணனைப் பார்த்து “கதையின் தொடக்கத்தில், அதாவது முதல் மனைவியை மணப்பதற்கு முன் பண்ணையாரும் ஹீரோவும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுக்கு வசனம் எழுதிக் கொண்டு வா.. அந்தக் காட்சிகளுக்கான படப்பிடிப்பை முதலில் நடத்துவோம். பின்னர் இரு கதாநாயகிகளையும் தேர்ந்தெடுத்த பின்னர் தொடர்ந்து படப்பிடிப்பை  நடத்திக் கொள்ளலாம்” என்றார்.

எம்.ஜி.ஆர். படங்களைப் பொறுத்தவரையில் நடிகர், நடிகைகள், தொழில் நுணுக்கக் கலைஞர்கள் ஆகிய அனைவரையும் அவரேதான் தேர்ந்தெடுப்பார் என்பதை கோபாலகிருஷ்ணன் அறிந்திருந்த காரணத்தால்… வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர் சொன்ன இரண்டு காட்சிகளுக்கும்  வசனம் எழுதினார்  அவர்.  

அதையடுத்து படப்பிடிப்பு தேதியையும் படப்பிடிப்பு நடைபெற உள்ள ஸ்டுடியோ பற்றியும் கோபாலகிருஷ்ணனுக்கு தெரிவித்த பட அதிபர் படப்பிடிப்பு அன்று அதிகாலையிலேயே வந்து விடும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்.

‘கற்பகம்’ படத்திலே கதாநாயகன், கதாநாயகி அளவிற்கு முக்கியத்துவம் உள்ள  பாத்திரம் அந்த  மாமனார் கதாப்பாத்திரம், ஆகவே, அந்த பாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய கோபாலகிருஷ்ணன் அது பற்றி தயாரிப்பாளரிடம் கேட்டபோது அதையெல்லாம் எம்.ஜி.ஆர்.தான் முடிவெடுத்து இருக்கிறார் என்றும் படப்பிடிப்பு நாள் அன்றுதான் யார் நடிக்கப் போகிறார் என்ற விவரம் தெரியும் என்றும் தயாரிப்பாளரிடமிருந்து பதில் வந்தது.

படப்பிடிப்பு நாள் அன்று அந்த மாமனார் பாத்திரத்தில் நடிக்க வந்திருந்தவரைப் பார்த்ததும் கோபாலகிருஷ்ணன் அடைந்த ஏமாற்றத்துக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

எம் ஜி ஆர் தேர்ந்தெடுத்திருந்த நடிகர் நல்ல பண்பட்ட நடிகர்தான். ஆனால் உருவ அமைப்பைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு மாமனாராக அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது சிரமம் என்று கோபாலகிருஷ்ணன் மனதிற்குப்பட்டது. அந்தக் கதாபாத்திரத்திற்கு கே.எஸ். ஜி. யின் ஒரே தேர்வு எஸ்.வி.ரங்காராவ் மட்டுமே.

நடிகர் தேர்வு சரியாக அமையவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணனை இன்னும் மிகப் பெரிய வேதனைக்குள்ளாக்கியது..  எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்திருந்த இயக்குநர் அன்று அந்தக்  காட்சியை படமாக்கிய விதம்.

ஒரு நல்ல கதை சிதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அவர் மனதிற்குள் தோன்றியது. ஆனால் அதை எம்.ஜி.ஆரிடம் எப்படி எடுத்து சொல்வது..? அதனால் மனக் குமைச்சலுடன் செட்டின் ஓரத்தில் ஒதுங்கிவிட்டார் கோபாலகிருஷ்ணன்.

அன்று முழுவதும் அவர் படப்பிடிப்பில்  ஈடுபாடு இல்லாமல் இருந்ததை  அந்த பரப்பரப்பான படப்பிடிப்புக்கு இடையேயும் எம். ஜி. ஆர். கவனித்திருக்கிறார் என்பது அந்த இரண்டு நாள் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு எம். ஜி. ஆரின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்கச் சென்றபோதுதான் கோபாலகிருஷ்ணனுக்குத்  தெரிந்தது.

“என்ன தம்பி..  நீ எப்போதும் படப்பிடிப்பில் நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது, நடிப்பு சொல்லிக் கொடுப்பது என்று ஒரு வினாடி கூட உட்காராமல் துரு துறுவென்று இருப்பாயாமே. அப்படிப்பட்ட நீ நம்ம படப்பிடிப்பில் பேசாமல் ஒதுங்கி நின்று விட்டாயே.. என்ன காரணம்..?” என்று கேட்டார் எம். ஜி. ஆர்.

மாமனார் பாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்திருந்த நடிகரை எனக்குப் பிடிக்கவில்லை.. அதேபோல் அந்த இயக்குநர் காட்சியைப் படமாக்கியவிதத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றும்  எம்.ஜி.ஆரிடம் கூற முடியுமா..?

ஆகவே, அதை எல்லாம் அப்படியே மனதுக்குள் புதைத்துக் கொண்டு “நான் சொல்லித் தருகின்ற அளவிற்கு அங்கு நடிகர்கள் யாருமில்லையே…” என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன்.

எம்.ஜி.ஆர். எப்படிப்பட்டவர்…? கோபாலகிருஷ்ணன் மனதில் உள்ளது என்னவென்பதை வரவழைக்க அவருக்கு  வழி தெரியாதா என்ன..?

“அன்று படப்பிடிப்பில் நடந்தது எதுவுமே உனக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்துதான் உன்னை வரவழைத்தேன். அதனால், இப்போது உண்மையான காரணம் என்ன என்பதை  சொல்”  என்றார் எம்.ஜி.ஆர்.

அவர் பரிவோடு கேட்டவிதம் தனது  மனக் குறையை அவரிடம் சொல்லலாம் என்ற தைரியத்தை கோபாலகிருஷ்ணனுக்குக் கொடுத்ததால் “மாமனார் கதாப்பாத்திரத்தை ஏற்றவரின் உருவ அமைப்பு.. இயக்குநரின் திறமை ஆகிய இரண்டுமே எனக்கு திருப்தியாக இல்லை..” என்றார் கே. எஸ். ஜி.

சிறிது நேரம் மவுனமாக இருந்த எம்.ஜி.ஆர்., “உன் மனதுக்குப்பட்ட இரண்டு குறைகளுமே நியாயமானதுதான். இயக்குநரைப் பற்றி நாம் எப்போது வேண்டுமானால் முடிவெடுத்துக் கொள்ளலாம். மாமனார் கதாப்பாத்திரத்திற்கு எந்த  நடிகரைப் போட்டால் சரியாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்..?” என்று கேட்டார்.

“உங்களுக்கு மாமனாராக நடிப்பவர் ரங்காராவ் போல இருக்க வேண்டும்” என்று  கே.எஸ்.ஜி., சொன்வுடன் “அதென்ன ரங்காராவைப் போல..? ரங்காராவைப் போட்டால் சரியாக இருக்கும் என்று நேராக சொல்ல வேண்டியதுதானே..” என்றார் எம்.ஜி.ஆர்.

“இந்தப் படத்தைப் பொறுத்தவரை நான் கதை வசனகர்த்தாதானே” என்று கோபாலகிருஷ்ணன் சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர்.,  “சரி..  ரங்காராவையே ஒப்பந்தம் செய்யச் சொல்கிறேன். இப்போது திருப்திதானே…” என்று கேட்க “பூரண திருப்தி” என்று கூறிவிட்டு அவரது இல்லத்தை விட்டு புறப்பட்டார் கோபாலகிருஷ்ணன்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. அந்த  இடைப்பட்ட காலத்தில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், கே.எஸ்.ஜி.யைச்  சந்திக்கவேயில்லை. 

ஒரு நல்ல கதை இப்படி முடங்கிப் போவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்தத் தயாரிப்பாளரைத் தேடி கோபாலகிருஷ்ணன் சென்றபோதுதான் படம் தயாரிக்கும் சூழ்நிலையில் அந்தத் தயாரிப்பாளர்  இல்லை என்பது அவருக்குத்  தெரிய வந்தது.

அந்தப் படத்திற்காக அந்தப் படத் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம்  வாங்கியிருந்த பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டு அந்தக் கதையின் உரிமையை திரும்பப் பெற்று அந்தப் படத்தை எடுத்தார் கோபாலகிருஷ்ணன்.

சிவாஜி கணேசன் நடிப்பதாக இருந்து பின்னர் எம். ஜி. ஆர்.  கதாநாயகனாக இரண்டு நாட்கள் நடித்த அந்தக் கதை இறுதியில் ஜெமினி கணேசன் நாயகனாக  நடிக்க ‘கற்பகம்’ என்ற பெயரில் வெளியானது மட்டுமின்றி வசூலில் மிகப் பெரிய சாதனை புரிந்தது.  

அந்தக் ‘கற்பகம்’ படத்தில்தான் ‘புன்னகை அரசி’ என்று ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் கே.ஆர்.விஜயா கதாநாயகியாக அறிமுகமானார்.

அதுவரை கதாசிரியராகவும், இயக்குநராகவும் இருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை, ஸ்டுடியோ அதிபராக ஆக்கியதும் அந்தக் ‘கற்பகம்’ படம்தான்.

- Advertisement -

Read more

Local News