Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

சினிமா வரலாறு – 37 – ஜெமினி கணேசன் பட வாய்ப்புகளை இழக்கக் காரணமான ‘சோ’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்த ‘பார் மகளே பார்’ படத்தில் நடிகராக அறிமுகமான சோவிற்கு, திரைக்கதை வசனம் எழுதும் வாய்ப்பை முதலில் வழங்கியவர்  முக்தா சீனிவாசன்.

அவரது இயக்கத்திலே ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த ‘தேன் மழை’ என்ற  படம்தான் சோ, திரைக்கதை வசனம் எழுதிய முதல் திரைப்படம்.

திரையுலகில் பல நடிகர்களுக்கு நெருக்கமாக இருந்த டாக்டர் ஜெகதீசன், சோ அவர்களுக்கும் முக்தா சீனிவாசன் அவர்களுக்கும் நல்ல நண்பர். அவர் மூலம்தான் ‘சோ’வை  தன்னுடைய  படத்திலே  பணியாற்ற ஒப்பந்தம் செய்தார் முக்தா சீனிவாசன்.

“திரைக்கதையை  எப்படி எழுத வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தவர் முக்தா சீனிவாசன் அவர்கள்தான்” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் சோ, அந்தப் படத்தில் பணியாற்றும்போது அவருக்கும் முக்தா சகோதரர்களுக்கும் இடையே அடிக்கடி தோன்றிய சண்டைகள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

“என்னுடைய மேடை அனுபங்களை வைத்து என்னை நானே உயர்வாக நினைத்துக் கொண்டிருந்த கால கட்டம் அது. அதனால் நாங்கள் நன்றாக சண்டை பிடித்துக் கொள்வது வழக்கம். டாக்டர் ஜெகதீசன்தான் எங்களை அடிக்கடி சமாதானப்படுத்தி வைப்பார். அதற்குப் பிறகு நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.

திரையுலகில் எனக்கு மிக நெருக்கமாக உள்ள தயாரிப்பாளர், இயக்குனர் என்றால் அது முக்தா ராமசாமி அவர்களும் முக்தா சீனிவாசன் அவர்களும்தான். எனக்கு ஒரு வெற்றி கிடைத்தால் அதைத் தனது வெற்றியாக நினைத்து மகிழ்ச்சி அடைவார் சீனிவாசன். நாணயம் என்பதற்கு இலக்கணமாக திகழ்பவர் அவர்”  என்று ஒரு கட்டுரையில் முக்தா சீனிவாசன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் சோ.

முக்தா சீனிவாசனின் இயக்கத்தில் ஐந்து திரைப்படங்களுக்கு  வசனம் எழுதிய    ‘சோ’-விற்கு முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியபோதே, அவர் மீது மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் ‘தேன் மழை’ படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவம்.

‘தேன் மழை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அப்படத்தின் நாயகனான ஜெமினி கணேசன், சோ எழுதியிருந்த வசனங்களைப் படித்துவிட்டு “இதெல்லாம் என்ன வசனம்?” என்று சொல்லியபடியே அந்த வசனம் எழுதப்பட்ட காகிதங்களைத்  தூக்கி எறிந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் ‘சோ’-வுக்கு சாதாரணமான விஷயங்களுக்கே கோபம் மூக்கின் மீது வரும். அப்படி இருக்க அவர் எழுதிய வசனங்களை அப்படி தூக்கி போட்டால் சும்மா இருப்பாரா…? தான் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்தார் அவர். அவர் ஆத்திரத்துடன் எழுந்ததைக் கவனித்த முக்தா சீனிவாசன்  ஜெமினி கணேசன் அருகில் சோ செல்வதற்கு முன்பாகவே,  அவரது கையைப் பிடித்து இழுத்தார்.

 “இப்போது  நீ ஜெமினியிடம் போய் சத்தம் போட்டால் நிச்சயம் அது பெரிய பிரச்னை ஆகும். அவர் இந்தப் படத்தின் ஹீரோ. அவர் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தப் படத்தை எங்களால் முடிக்க முடியாதுன்னு உனக்கே நன்றாகத் தெரியும். அதனால நடந்த இந்த சம்பவத்தை அப்படியே மறந்து விடு..“ என்று சோவிடம் கூறினார் அவர்.

“நீங்க உங்க படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக நான் அவமானத்தை சகித்துக் கொள்ள வேண்டுமா..?” என்று அவரிடம் கோபமாக சோ கேட்க, “எங்கள்  மீது உனக்கு அக்கறை இருந்தால் சகித்துக் கொண்டு அமைதியாக இரு. நாங்கள் எக்கேடு கேட்டுப் போனாலும்  பரவாயில்லை என்று நினைத்தால் நீ தாராளமாக அவரிடம் போய் உன் இஷ்டம் போல சண்டை போட்டுக் கொள்ளலாம்…” என்று சோவிடம் சொல்லிவிட்டு அந்த செட்டின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்துவிட்டார் முக்தா சீனிவாசன்.

அவர் அப்படி சொன்னதும் தன்னுடைய கோபத்தினால் படப்பிடிப்பு நின்றுபோய் அவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டார் சோ. அதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் படப்பிடிப்பு எந்த பிரச்னையும் இல்லாமல் நடைபெற்றது.

தங்களுக்கு எந்தப் பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காக தனக்கு ஏற்பட்ட அவமதிப்பை பெருந்தன்மையோடு பொறுத்துக் கொண்ட சோ  மீது முக்தா சகோதரர்களுக்கு மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு மிகவும் வித்தியாசமான முறையிலே அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

‘சோ’வை படப்படிப்பு தளத்தில் அவமானப்படுத்திய ஜெமினி கணேசனுக்கு  அடுத்து  தங்களது எந்த படத்திலும் அவர்கள் வாய்ப்பு தரவில்லை. அதே சமயம் அவர்களுக்காக பொறுமை காத்த சோ, தொடர்ந்து அவர்களுடைய பல படங்களில் இடம் பெற்றார்.

“தங்களது படங்களில் வாய்ப்பு தரவில்லை என்றாலும் அதற்குப் பிறகு ஜெமினி கணேசனோடு  அவர்கள் நட்பு பாராட்டாமல் இல்லை. அதற்குப் பிறகும் அவர்கள் நட்பு நீடித்தது. அதேபோன்று ஜெமினி கணேசனுக்கு ஏதாவது நல்ல விஷயங்கள் நடந்தால் முதல் பாராட்டு அவர்களுடையதாகவே இருந்தது. அந்த மாதிரி  பெருந்தன்மையை எல்லோரிடமும் பார்க்க முடியாது…” என்று முக்தா சகோதரர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் சோ.

மிகப் பெரிய திறமைசாலியாக இருந்த சோ தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால் உடனே பொங்கி எழுந்து விடுவார். அதே நேரத்தில் தான் செய்தது தவறு என்று தெரிந்தால் உடனே கீழே இறங்கி வரவும் அவர் தவறியதில்லை.

அறிஞர் அண்ணா அவர்களோடு சோவிற்கு ஏற்பட்ட அனுபவம் இன்னும் சுவையானது.

‘சோ’வின் திரைக்கதை வசனத்தில் முக்தா சீனிவாசன் இயக்கிய படம் ஒன்றைப் பார்க்க வரும்படி அறிஞர் அண்ணா அவர்களை அழைப்பதற்காக அவரது நுங்கம்பாக்கம் விட்டுக்கு சென்ற முக்தா சீனிவாசன் தன்னுடன் ‘சோ’-வையும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.

அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த காலக்கட்டம். இவர்கள் சென்ற சமயம் அறிஞர் அண்ணா அவர்கள் வீட்டில் இல்லாததால் இவர்கள் இருவரும் அவரது வீட்டில் அவரது வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் சென்ற பின்னர் வெளியில் இருந்து  வீடு திரும்பிய  அறிஞர் அண்ணா அவர்கள் இருவரையும் பார்த்தபடியே, யாருடனோ பேசிக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

சோ அவர்களின் நாடகங்களுக்கு பல முறை வந்துள்ள அவருக்கு சோவை மிக நன்றாகத் தெரியும். அதே போன்று முக்தா சீனிவாசன் அவர்களையும் அண்ணா  நன்கு அறிவார். அப்படி இருக்க தங்களோடு ஒரு வார்த்தைகூட பேசாமல் அண்ணா அவர்கள் நேராக வீட்டுக்குள் போனதைப் பார்த்தவுடன் ‘சோ’வுக்கு அவர் மீது கோபம் என்றால் அப்படி ஒரு கோபம் வந்தது. இருந்தாலும் பல்லைக் கடித்தபடி கோபத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் அவர்.

அடுத்து அண்ணா அவர்கள் தனது அறைக்கு வந்த பிறகும் முதலில் அவரைச்  சந்திக்கின்ற வாய்ப்பு  சோவுக்கும், முக்தா சீனிவாசனுக்கும் தரப்படவில்லை.

தங்களுக்கு அருகில் இருந்த வேறு சிலருக்கு  அண்ணாவைப்  சந்திப்பதற்கு முதலில் அழைப்பு வந்ததும்,கோபத்தின் உச்சிக்கு சென்ற ‘சோ’ தனது நாற்காலியை விட்டு எழுந்து  நேராக முக்தா சீனிவாசனிடம் சென்றார். ”நீங்களே அவரைப் பார்த்து உங்க படத்துக்கு கூப்பிட்டுக் கொள்ளுங்கள். நான் கிளம்புகிறேன்” என்று கூறிவிட்டு அண்ணா அவர்களின் வீட்டைவிட்டு வெளியே கிளம்பி விட்டார்.

அங்கே வரும்போது முக்தா சீனிவாசனின் காரில் வந்திருந்ததால் திரும்பிப் போக அவரிடம் கார் இல்லை. இருந்தும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார் அவர்.

அண்ணாவின் வீட்டை விட்டு வெளியேறி அவர் தெருவில் நடக்க ஆரம்பித்ததும் அவரைப் பின் தொடர்ந்து வந்த முக்தா சீனிவாசன் “சோ“ என்று சத்தமாக அவர் பெயரைச் சொல்லி  அழைத்தார்.  அவரது அழைப்புக்கு மரியாதை கொடுத்து அவர் அருகில் வந்த சோ, “அவர் முதலமைச்சராக இருந்தால் இருக்கட்டும் சார். அதற்காக இது மாதிரியான அவமானத்தை எல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது…” என்று அவரிடம் சொல்ல ”பேசாமல் என் கூட வா. முதல்வர் நம்மை அழைக்கிறார்..” என்று கூறி அறிஞர் அண்ணா அவர்களது அறைக்கு சோவை அழைத்துச் சென்றார் முக்தா சீனிவாசன்.

சோவைப் பார்த்து சிரித்த அறிஞர் அண்ணா “பொறுப்பில் இருக்கும் மனிதனுக்கு பல வேலைகள் இருக்கும். பல பிரச்னைகள் இருக்கும். அதைக்கூட புரிஞ்சிக்கலேன்னா எப்படி..?” என்று சோவைப் பார்த்து கேட்டார் அண்ணா.

படத்தைப் பார்க்க வரும்படி அவரை அழைத்துவிட்டு அவர்கள் திரும்பியபோது ”எல்லாம் இருக்கு. வயதுதான் போதவில்லை” என்று சோ பற்றி, முக்தா சீனிவாசனிடம் சிரித்தபடியே சொன்னார் அறிஞர் அண்ணா.

“என்னுடைய அவசரம், ஆத்திரம்  ஆகியவைகளைப் பற்றி எண்ணி நானே வருத்தப்படுகின்ற அளவிலே அவருடைய பெருந்தன்மை அமைந்தது…” என்று அந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டிருக்கிறார் சோ.

(தொடரும்)

- Advertisement -

Read more

Local News