Wednesday, November 20, 2024

விமர்சனம்: பொம்மை நாயகி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு. மனைவி மற்றும் 9 வயது மகள் பொம்மை நாயகி ஆகியோருடன் வசித்து வருகிறார். சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கின்றனர். மகளைத் தேடி வந்த யோகிபாபு, அந்த இருவரை விரட்டுகிறார். மகள் மயங்கிக் கிடக்கிறாள்…

பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

ஏழை குடும்பத்தலைவனாக யோகி பாபு.. மனைவியிடம் நேசமுள்ள கணவனாக, மகளிடம் பாசமுள்ள தகப்பனாக.. மொத்தத்தில் ஒரு குடும்பத் தலைவனை கண் முன் நிறுத்துகிறார். மகளை இருவர் பலாத்காரப் படுத்த முயல்கிற காட்சியைக் கண்டு பதறுவது, புகார் அளிக்க மறுத்து சராசரி மனிதனின் உணர்வை வெளிப்படுத்துவது, பிறகு அவரே ஆவேசம் கொண்டு நீதி மன்றத்தை நாடுவது, பிறகு விரக்தியில் பேசுவது.. என அற்புதமாக நடித்து உள்ளார்.

யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா, கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

யோகிபாபுவின் அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன் மற்றும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞராக ஹரி கிருஷ்ணன்,  யோகி பாபுவின் அப்பாவாக  ஜி.எம். குமார், சிறுமி பொம்மை நாயகியான ஸ்ரீமதி  உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு –அதிசயராஜின் ஒளிப்பதிவு, சுந்தரமூர்த்தியின் இசை, செல்வா ஆர்.கே.வின் கலை… அனைத்தும் படத்துடன் ஒன்ற உதவுகின்றன.

வசனங்கள் யதார்த்தம்.. சுடும் யதார்த்தம்.

‘பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற’

‘தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன்தான் சீரழியிறான்0’

‘போற உயிரு போராடியே போகட்டும்’  –  போன்ற வசனங்கள் நெஞ்சில் தைக்கின்றன.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பெரிய பதற்றத்தைக் கொடுக்கும் வேளையில் ‘பாரத மாதா யார்’ என்கிற கேள்விக்கு பொம்மை நாயகி சொல்லும் பதில் சிந்திக்க வைக்கிறது.

படத்தை பாடமாகவும் எடுத்துள்ளார் இயக்குநர். உதாரணம், குழந்தைகளை விசாரிக்கும்போது காவலர்கள் சீருடையில் வரக்கூடாது என்பதைச் சொல்லலாம். பலருக்கும் தெரியாத விசயம் இது.

அண்ணன் தம்பியாக இருந்தாலும் வாக்கு அரசியல் ஒருவரை எப்படி மாற்றுகின்றன என்பதை எதார்த்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷான்.
சாதி உணர்வுடன் செயல்படும் நபர்கள் சிலர் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவும், சாதி உணர்வை தள்ளி வைத்து  அநீதிக்கு எதிராக போடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாகவும் காட்சிப் படுத்தி உள்ளார் இயக்குநர் ஷான்.

சமீப காலமாக தொடர்ந்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான திரைப்படங்களும் காட்சிகளும் அதிகரித்து வரும் சூழலில் இப்படம் மிக அவசியமானது. அனைவரும் பார்த்து ரசிக்க அல்ல.. உணர வேண்டிய படம்.



- Advertisement -

Read more

Local News