பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா(வயது 89) உடல்நலக்குறைவால் இன்று (24/11/2025)மும்பையில் காலமானார். காதல்,ஆக்ஷன் என தனது தனித்துவமான நடிப்பால் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

ஆயி மிலன் கி பேலா, பூல் அவுர் பத்தர், ஆயே தின் பஹார் கே, சீதா அவுர் கீதா, ராஜா ஜானி, ஜுக்னு, யாதோன் கி பாராத், தோஸ்த், ஷோலே, பிரதிக்ஞா, சரஸ், தரம் வீர் போன்ற சிறப்பான படங்களில் நடித்தவர் தர்மேந்திரா. கடைசியாக 2023ல், கரண் ஜோஹர் இயக்கிய ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தில் அவர் நடித்து இருந்தார். தர்மேந்திரா 200க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் தர்மேந்திரா தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மையோடு திகழ்ந்தவர். இவரது மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு ஷாருக்கான், சல்மான்கான் , ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட பல இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

