இன்றைய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வெளியேறுபவர் பாடகர் வேல்முருகனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
‘பிக் பாஸ்’ சீஸன்-4 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார். அப்போதுதான் கடைசி வாரத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் சூழல் வரும். அதனால் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுவது இந்தப் போட்டியின் கட்டாயமாகும்.
இந்த நிகழ்ச்சி துவங்கிய 2-வது வாரத்தில் நடிகை ரேகா வெளியேறினார். இன்றைக்கு யார் வெளியேறியது என்பது பற்றிய கேள்விக்குறி ‘பிக் பாஸ்’ ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக நேற்றைக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த 10 நபர்களில் 5 பேரை நடிகர் கமல்ஹாசனே காப்பாற்றிவிட்டார்.
மீதமிருக்கும் 5 நபர்களான சுரேஷ், சோமசேகர், வேல்முருகன், ஆஜித், மற்றும் நிஷா ஆகியோரில் ஒருவர் இன்றைக்கு வெளியேறப்பட வேண்டும்.
இவர்களில் வேல்முருகன்தான் வெளியேறியிருப்பார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த எலிமினேஷன் லிஸ்ட்டில் இருக்கும் சுரேஷ், ஆஜீத், நிஷா மூவருக்கும் இந்த நிகழ்ச்சியில் இப்போதுவரைக்கும் சிறப்பான இடம் உண்டு. சோமசேகருக்கு உள்ளேயிருக்கும் இள வயது நட்பு வட்டாரத்தில் நல்ல பெயர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கும் அவர் தேவையாய் இருக்கிறார்.
அதே சமயம் எலிமினேஷன் லிஸ்ட்டில் இருப்பவர்களிலேயே மிக சாந்தமாக, தான் உண்டு.. தன் பாட்டு உண்டு என்று அமைதியின் திருவுருமாக இருந்தவர் வேல்முருகன்தான்.
எப்போதாவது அவ்வப்போது சில பாடல்களை பாடி நேரத்தைக் கடத்த உதவியிருக்கிறார். சில டாஸ்க் நிகழ்ச்சிகளின்போது உற்சாகத்திற்காக பாடல்களைப் பாடி உதவியிருக்கிறார்.
ஒரு முறை தனக்கு வேட்டியை பரிசாகக் கொடுத்ததை சுரேஷ் பரிகாசமாகப் பேசியதைக் கண்டித்து மிகக் கோபமடைந்து பேசினார் சுரேஷ். அடுத்து தூங்கிக் கொண்டிருந்த பாலாவை எழுப்பி வீட்டு வேலை செய்ய வைத்ததற்காக நடந்த சண்டையிலும் கலந்து கொண்டார். மற்றபடி வேல்முருகனின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவுதான்.
இப்படி வேல்முருகன் எந்தவித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் அமைதியாய் இருந்ததால், கோயம்பேடு மார்க்கெட் குழாயடி சண்டை போன்ற இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய இயல்பான, அமைதியான குணம், அந்த நிகழ்ச்சிக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை என்பதால் வெளியிலும் அவருக்கு ஆதரவு குறைவாகவே இருந்தது.
அதோடு, இந்த வாரம் பிரபல சர்ச்சை நாயகியான பின்னணி பாடகி சுசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வரவிருப்பதால் இன்னொரு பாடகர் அங்கே தேவையில்லை என்ற சூழலும் உருவாகியுள்ளது.
எனவே வேல்முருகனே இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது..!