1997ல் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார் சூர்யா. அடுத்தடுத்து அவர் நடித்து வெளியான அவரது சில படங்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆனால் பாலா இயக்கத்தில் 2001ல் வெளியான நந்தா பெரு வெற்றி பெற்றது.. அதோடு சூர்யாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து அவருக்கு ஏறுமுகம்தான். இன்று வெற்றிகரமான நாயகன் என்பதோடு நடிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.
இப்படிப்பட்ட சூர்யாவுக்கு திரைத்துறை மீது ஈடுபாடே இல்லை என்கிற தகவலை வெளியிட்டு இருக்கிறார் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ்.
சமீபத்தில் அவர் அளித்த வீடியோ பேட்டி ஒன்றில், “ஏதோ ஒரு அழைப்பிதழை தருவதற்காக எனது வீட்டுக்கு வந்தார் சூர்யா. அப்போது அவர் பெயர் சரவணன். அவரிடம், ‘ ஏம்பா.. பார்க்க அருமையா இருக்கே.. சிவகுமார் மகன்.. சினிமாவில நடிக்கலாமே’ என்றேன். ஆனால் சூர்யா பதறிப்போய், ‘அய்யோ.. எனக்கு அது மாதிரி எண்ணமே இல்லே.. பிசினஸ் செய்யணும் அதான் என் விருப்பம்’ என்றார்.
ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே நேருக்கு நேர் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. அந்த சில மாதங்களில் அவரது மனதில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது என தெரியவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார் பாக்யராஜ்.
மனித மனத்தை யார் அறிவார்!