Thursday, April 11, 2024

பனாரஸ் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

காதலை முன்னிலைப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தை என்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜையீத் கான் மற்றும் சோனல் மோன்டோரியோ கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

இந்துக்களின் புனித ஸ்தலமான காசியை கதைக் களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகியிருக்கிறது இப்படம். கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

காதல் கதைகள் பல வகை உண்டு. அந்த வகைகளில் ஒன்றாக இந்தக் காதலை டைம் மிஷின் பாணியில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெயதீர்த்தா.

1998-ம் ஆண்டு வெளியான ‘ரன் லோலா ரன்’ என்ற ஜெர்மன் திரைப்படம் உலக சினிமாக்களையே கலக்கியெடுத்தது. நாம் செய்யும் ஒரு செயலில், சில நிமிட தாமதத்தினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை பலவித உதாரணங்களின் மூலமாக திரில்லர் பாணியில் சொல்லியிருந்ததார்கள். இந்தப் படத்தின் கதைக் கருவிலேயே முறையான அனுமதியில்லாமல் பல மொழிகளில் படங்கள் வெளியாகிவிட்டன. இந்தப் படமும் அது போன்ற ஒன்றுதான்.

நாயகி சோனல் மோண்டோரியோ கல்லூரி மாணவி. டிவி சேனலில் வி.ஜே. யுடியூப் சேனலும் நடத்துகிறார். “இவரிடம் ஒரு வாரத்திற்குள்ளாக நெருங்கிக் காட்டுகிறேன்” என்று தன் நண்பர்களிடம் சவால் விடும் நாயகன் ஜயீத்கான், சோனலிடம், தான் எதிர் காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லி அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.

நம்ப முடியாத கதையாக இருந்தாலும் தன்னைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்கிறாரே என்றெண்ணி நாயகி அவர் மீது ஆர்வங்காட்ட.. இதையே அட்வான்ட்டேஜாக எடுத்துக் கொள்ளும் ஹீரோ, நாயகியுடன் ஏடாகூடா சூழலில் ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து தன் நண்பர்களிடம் காட்டி தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

ஆனால், இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக.. நாயகி சோனலுக்கு அவமானமாகிறது. கல்லூரிக்குக்கூட வராமல் காசியில் இருக்கும் தனது சித்தி வீட்டுக்குச் சென்று விடுகிறார் சோனல்.

“யாரையும் காயப்படுத்தி, அவமானப்படுத்தக் கூடாது. அது நம்மை உடன் இருந்து கொல்லும்” என்று நாயகனின் அப்பா அவருக்கு அட்வைஸ் செய்ய.. சோனலிடம் மன்னிப்பு கேட்பதற்காக காசிக்குப் பயணப்படுகிறார் நாயகன் ஜையீத்கான். அங்கே அவர் சோனலை சந்தித்தாரா..? தன் மன்னிப்பை தெரிவித்தாரா?.. என்பதுதான் இந்தப் படத்தின் முடிவுரை…!

நாயகன் ஜயீத் கான் அறிமுகம் என்றே சொல்ல முடியாதபடிக்கு பழுத்த அனுபவசாலி நடிகரைப் போல நடித்திருக்கிறார். அறிமுகக் காட்சியிலேயே படபடவென்று பொரிந்து தள்ளும் அந்த வசனங்களை கவர்ந்திழுக்கும்வகையில் பேசி நடித்திருக்கிறார்.

காசிக்கு வந்த பின்பு தன்னை அறியாமலேயே சோனலை அவர் காதலிக்கத் துவங்கும் தருணத்தில் இருந்து அவரது காதல் நடிப்பும், சண்டைக் காட்சிகளில் வேகமான ஆக்சன்களும், பொறுப்பை உணர்ந்து கொண்ட இளைஞனுக்குரிய நடிப்பையும் காண்பித்து நடிப்பில் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

நாயகியான சோனல் அப்படியொன்றும் அசத்தும் அழகி இல்லையென்றாலும் அவருடைய முகவெட்டு கேமிராவுக்கு ஏற்றது. மாநிறத்தில் அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறார்.

படத் துவக்கத்தில் நாயகன் ஜயீத் அவிழ்த்து விடும் கட்டுக் கதைகளை ஆச்சரியத்துடன் கேட்டு உண்மையென்று நம்பும் அவர் நடிப்பு சிறப்புதான். இதேபோல் மன்னிப்பு கேட்டு வந்து நிற்கும் நாயகனின் சீற்றத்துடன் தனது கோபத்தைக் காட்டு்ம் இடத்திலும் இன்னொரு நடிப்பையும் காண்பித்திருக்கிறார். இவருக்கான டிரெஸ்ஸிங் சென்ஸ் சூப்பர். கடைசிவரையிலும் திரையில் அழகாய் ஜொலிக்கிறார் நாயகி சோனல்.

நாயகனின் அப்பாவாக தேவராஜூம், நாயகியின் சித்தப்பாவாக அச்யுத் குமாரும் ஆளுக்கொரு பக்கமாக நம்மைக் கவர்கிறார்கள். இதில் அச்யுத் குமார் கடைசிவரையிலும் திரையில் இருப்பதால் கொஞ்சம் கூடுதலாக ஈர்க்கிறார். இவருடைய மனைவியாக நடித்தவரை திரையில் பார்த்த மொத்த ஆண்கள் கூட்டமும் இப்போது இணையத்தில் தேடுகிறது. ஆண்ட்டி அப்படியொரு அழகு..!

ஜயீத்தின் பனாரஸ் நண்பராக வரும் சுஜய் சாஸ்திரி தனது படபட பேச்சில் நம்மைத் தொடர்ந்து கவனிக்க வைக்கிறார். துவக்கத்தில் காமெடியன் போல தெரிந்தாலும் தனது காதல் கதையைச் சொன்ன பின்பு டிராக் மாறி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இடம் பிடிக்கிறார். கிளைமாக்ஸில் நம்மை கண் கலங்கவும் வைத்திருக்கிறார்.

படத்தில் இன்னொரு கதாபாத்திரமாகவே வருகிறது பனாரஸ்’ என்ற காசி மாநகரம். இந்த நகரத்தை இதுவரையிலும் யாரும் காட்டியிருக்காத வகையில் காட்டி நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி. காசியை இதுவரையிலும் பார்த்திருக்காவர்களுக்கும் பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.

இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் அழகு தமிழில் பாடல்கள் ஒலித்து காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. ‘மாயகங்கா‘, ‘இலக்கண கவிதை எழுதிய அழகே…’ ஆகிய பாடல்கள் கேட்க வைத்திருக்கின்றன. பின்னணி இசை டைம் மிஷின் நேரத்தில் ஒளிப்பதிவுடன் சேர்ந்து நம்மை பதைபதைக்க வைத்துள்ளது.

இரண்டாம் பாதியில் வரும் அந்த டைம் லூப் காட்சிகள் இந்தக் கதைக்குத் தேவைதானா என்ற கேள்வியும் எழுகிறது. முதல் காட்சியையும், இந்தக் காட்சிகளையும் இணைக்கும்விதமாகத் திரைக்கதை எழுதி முடித்திருந்தால் படம் அறிவியல் புனைவாகவே இருந்திருக்கும்.

ஆனால் கடைசியில் இதற்கு அச்யுத்குமார் மூலமாக கெமிஸ்ட்ரி ரியாக்ஷன் என்ற கதையை வைத்துவிட்டதால் ஏன், எதற்கு என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆனால், இது எல்லாவற்றையும் காதல் என்ற மாயக் கயிற்றால் கட்டி கடைசிவரையிலும் பார்க்க வைத்திருப்பது இயக்குநரின் திறமைதான்.

பனாரஸ் – காதலில் ஒரு பட்டுதான்..!

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News