சென்னை திரும்பினார் அஜித்!:  விரைவில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு!

‘துணிவு’ படத்துக்கு முன்னதாக நடிகர் அஜித்குமார் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. படத்தை முடித்ததும் தனது பைக்கில் உலக அளவில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.

இதனிடையே தான் அஜித்தின் பிறந்த நாள் அன்று அவரின் அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. அஜித்தின் சுற்றுப்பயணத்தால் படப்பிடிப்பு தாமதமாகவதாகக் கூறப்பட்டது. அண்மையில் ‘சந்திரமுகி 2’ நிகழ்வில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என லைகாவின் சுபாஸ்கரன் ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார்.

இந்நிலையில் ஓமன் நாட்டில் சுற்றுப் பயணத்திலிருந்த நடிகர் அஜித் அதனை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பியுள்ளார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் துபாயில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித் தனது அடுத்தக்கட்ட மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.