ஸ்ரீஆர்க் மீடியா சார்பில் தயாரிப்பாளர்கள் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சரவணன்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சிங்கம் புலி பேசும்போது, “கொல்லிமலை பகுதியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் நாடு என்று முடியும்படிதான் பெயர் வைத்திருப்பார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் சரவணனை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியபோது இருந்தே தெரியும். அவர் இயக்கிய ‘எங்கேயும் எப்போதும்’ படம் பார்த்துவிட்டு இவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
அதன்படி இந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் படப்பிடிப்புக்கு சென்ற முதல் நாளே, “இந்த படத்தில் நான் நடிக்க வரவில்லை. உங்களுடன் இணைந்து சேவை செய்ய வந்திருக்கிறேன்” என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரது சமூக அக்கறை எனக்கு பிடிக்கும்.
ஒளிப்பதிவாளர் சக்தியின் முழு திறமையை யாரும் பார்த்ததில்லை. இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கென தனியாக கோழிக் குழம்பு ஸ்பெஷலாக தயாராகும். அதை சாப்பிடுவதற்கு ஒரு போட்டியே நடக்கும்.

படத்தின் நாயகன் தர்ஷன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பல இடங்களில் ஒரு பெண்ணை தன் தோளில் தூக்கிக் கொண்டு உயரமான இடங்களுக்கு ஓடுவார். காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம் அப்படிப்பட்ட மலைப் பகுதி என்பதால். இதற்கு முன்பாக ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ ஆகிய படங்களில் பணியாற்றியபோது அந்த ஹீரோக்களின் கடின உழைப்பை நேரில் பார்த்தவன் நான். அதனால்தான் அவர்கள் இன்று அந்த உயரத்தில் இருக்கிறார்கள். அதேபோன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வை தர்ஷனிடமும் பார்த்தேன். நிச்சயமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும்.
இந்தப் படத்தின் டப்பிங்கின்போது வசனம் பேசும் இடைவேளையில், சில வரிகள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இதை கேட்டுவிட்டு இசையமைப்பாளர் எனக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு தருவார் என நினைத்தேன். கடைசியாக இந்த படத்தில் இரண்டு வரிகள் பாட இயக்குநர் வாய்ப்பு தந்தார்..” என்றார்.