Friday, April 12, 2024

பிரகாஷ்ராஜூக்கு எதிராக விஜயசாந்தி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் திடீர் திருப்பமாக ‘புரட்சி நடிகை’யான விஜயசாந்தியும் களத்தில் குதித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இதுவரையிலும் பிரகாஷ் ராஜ், விஷ்ணு மஞ்சு, ஜீவிதா ராஜசேகர், ஹேமா ஆகிய நால்வர் மட்டுமே தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.

இவர்களில் ஜீவிதாவைத் தவிர மற்ற மூவரும் தனியாக அணி அமைத்திருக்கிறார்கள். ஜீவிதா மட்டுமே தனித்து தலைவர் பதவிக்கு நிற்கப் போவதாகத் தெரிகிறது.

இந்த நேரத்தில் திடீரென்று பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகரான சி.வி.எல்.நரசிம்ம ராவ் இந்த நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக நேற்றைக்கு அறிவித்தார்.

ஐந்தாவது நபராக இவர் களத்தில் குதித்து அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதைவிட ஆச்சரியம், இந்த நரசிம்மராவிற்கு நடிகை விஜயசாந்தி ஆதரவு கொடுத்திருப்பதுதான். விஜயசாந்தி தற்போது பாரதீய ஜனதா கட்சியில் இருக்கிறார். அதனால், அந்தக் கட்சி சார்பிலான பாசத்தில்தான் நரசிம்மராவிற்கு அவர் ஆதரவு கொடுத்திருக்கிறாராம்.

இது குறித்து விஜயசாந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் “இன்றைய இளம் நடிகர், நடிகைகளுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகிறது. அதை சரியாக செய்யக் கூடிய ஒரு ஆள் தேவை. என்னுடைய ஆதரவை நான் நரசிம்மராவிற்கு வழங்குகிறேன். நான் அந்த சங்கத்தில் உறுப்பினராக இல்லையென்றாலும் சினிமா துறையைச் சேர்ந்தவள் என்பதால் எனது ஆதரவினை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயசாந்தி தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரையிலும் சேரவே இல்லை. ஆனாலும் இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் போட்டியிடுவதுகூட பிரகாஷ்ராஜை தோற்கடிப்பதற்காகத்தான் என்று ஆந்திரா திரையுலகத்தில் பேச்சு அடிபடுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் பிரகாஷ்ராஜ் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியையும், மோடியையும் கடுமையாக சாடி வருகிறார். சென்ற பாராளுமன்றத் தேர்தலில்கூட பெங்களூரில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

பிரகாஷ்ராஜை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே நரசிம்மராவை கட்சியே களத்தில் இறக்கியிருக்கிறது என்கிறார்கள் ஆந்திர மாநில பா.ஜ.கட்சியினர். அதே நேரம் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரான நடிகை ஜீவிதா ராஜசேகரும் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர்தான். எனவே இவர்கள் இருவரை வைத்தே பிரகாஷ்ராஜை தோற்கடிக்க பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திரைப்பட சங்கங்களில் கட்சிகள் தலையிட்டால் அவற்றின் நிலைமை என்னாகும் என்பது தமிழ்த் திரைப்பட சங்கங்களை பார்த்தாலே தெரியும். இப்போது இதே நிலைமை தெலுங்கு திரையுலகத்திலும் வரப் போகிறது.

- Advertisement -

Read more

Local News