நடிகை வரலட்சுமி சரத்குமார் ஹைதராபாத்தில் குடியேறப் போவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சென்னையில் தனது தாயார் சாயா மற்றும் தங்கை பூஜாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென்று தான் ஹைதராபாத்தில் குடியேறப் போவதாக தனது சமூக வலைத்தளத்தில் நேற்றைக்கு வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோவில் இது குறித்து வரலட்சுமி பேசுகையில், “எனக்கு எப்போதும் சிறந்த பிறந்த நாள்தான். நல்லது, கெட்டது மற்றும் பல சங்கடமான நேரங்களில், எனக்காக எப்போதும் என்னுடன் இருந்த அற்புதமான மனிதர்களுக்கு நன்றி. என்னுடைய கடைசி வார இறுதி நாட்களை அவர்களுடன் சென்னையில் கழித்ததே பெருமையாக இருக்கிறது.
இது என் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம். ஹைதராபாத். ஆமாம், நான் ஹைதராபாத்தில் குடியேறப் போகிறேன். அதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நான் இப்போது பயமாகவும், பதட்டமாகவும் இருக்கிறேன் என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. நான் அதிகமாக உங்களை நேசிக்கிறேன். இது என் குடும்பம். என் வாழ்க்கை. அனைவரும் எனது ஒரே குடும்பம் என்பதால் உங்கள் அனைவரின் ஆசியும், அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வேண்டும்…” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வரலட்சுமி தெலுங்கில் நடித்து வெளியான ‘கிராக்’ மற்றும் ‘நந்தி’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்று வரலட்சுமிக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. இதனால் தற்போது தெலுங்குப் படவுலகில் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனவாம்.
தற்போது சமந்தாவுடன் ‘யசோதா’, சந்தீப் கிஷானுடன் ‘மைக்கேல்’, ‘அனுமான்’, ‘ஆத்யா’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.