நடிகை லதாவை மலையாள நடிகர் ஜெயன் திருமணம் செய்து கொள்ள விரும்பிக் கேட்ட செய்தி, தற்போது வெளியில் வந்துள்ளது.
நடிகை லதா ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரால் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதற்கடுத்து எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார்.
எம்.ஜி.ஆர். முதலமைச்சரானவுடன் அடுத்து சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று அனைத்துக் கதாநாயகர்களுடனும் நடித்தார். அதன் பின்பும் அடுத்தக் கட்ட நாயகர்களாக இருந்த விஜயகுமார், ஜெய்கணேஷ், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடனும் நாயகியாக நடித்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டிலானார். பல ஆண்டுகளுக்குப் பின்புதான் சென்னைக்கு வந்து மீண்டும் சீரியல்கள், டிவிக்களில் நடிக்கத் தொடங்கினார்.
அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மறைந்த நடிகர் ஜெயன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி தன்னிடமே கேட்டதாக சொல்லியிருக்கிறார்.

இது பற்றி அவர் சொல்லும்போது, “நான் எம்.ஜி.ஆரின் அறிமுகம் என்பதால் தமிழ்த் திரையுலகத்தில் எனக்கு அப்பவே பெரிய மரியாதை இருந்தது. செட்ல நம்பியாரே என்கிட்ட வந்து, “அம்மா கொஞ்சம் தள்ளி உக்காரும்மா…” என்று வேணும்ன்னே கிண்டலா சொல்லுவார். மனோகர் ஸார் உள்ளிட்ட எல்லா பெரிய ஆர்ட்டிஸ்டுகளுமே என்கிட்ட பணிவாத்தான் பேசுவாங்க. நடந்துக்குவாங்க.
நான் தமிழ், தெலுங்கு, மலையாளம்ன்னு பிஸியா நடிச்சிட்டிருக்கும்போது ஒரு மலையாளப் படத்துல நடிகர் ஜெயனோட நடிச்சேன். அப்போ அவர் “என்னைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்புறேன்”னு என்கிட்டயே சொன்னார். பிரபோஸ் பண்ற விஷயமெல்லாம் சகஜம்தானே.. நான் அதைக் கேட்டுட்டு “அப்புறமா சொல்றேன்”னு சொல்லிட்டேன். ஆனால், அதுக்குள்ள அவர் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்திட்டாரு. அதைக் கேள்வி்ப்பட்டவுடனேயே எனக்குப் பெரிய அதிர்ச்சியாயிருச்சு. அவரோட மரணத்தை என்னால நம்பவே முடியலை.
அப்புறம் நான் மும்முரமா படங்கள்ல நடிச்சிட்டிருக்கும்போது எங்கம்மாதான் “நடிச்சது போதும்.. கல்யாணத்தைப் பண்ணிட்டு செட்டிலாகு…” என்று என்னை வற்புறுத்தினார். எல்லா அம்மாக்களுக்கும் ஒரு ஆசை இருக்கும்ல. அதன்படிதான் அவரும் கேட்டார். அவர் ஆசைக்காகவே நானும் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானேன்..” என்று சொல்லியிருக்கிறார்.