தயாரிப்பாளர் T.D.ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘நான் மிருகமாய் மாற.’
இந்தப் படத்தில் இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். மேலும் மதுசூதனராவ், அப்பனி சரத், ‘சூப்பர் குட்’ கண்ணன், K.S.G.வெங்கடேஷ், துளசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தின் நாயகியான ஹரிப்ரியாவிற்கு இந்த ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம், செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் உடன் 2-வது, மற்றும் தமிழில் 4-வது படமாகும்.
கர்நாடகாவைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பாக ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’ மற்றும் ‘வாராயோ வெண்ணிலாவே’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்தது குறித்தது நடிகை ஹரிப்பிரியா பேசும்போது, “நான் நடித்திருந்த கன்னட படமான ‘பெல்பாட்டம்’ படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநர் எனக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைத்தார். படத்தின் கதை நன்றாக இருந்ததால், உடனடியாக ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்தில் நான் ‘ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில், கணவன், குழந்தையை பாதுகாக்கும் ஒரு எதார்த்தமான இல்லத்தரசியாக நடித்துள்ளேன்.
சிறிது காலம் தமிழ் சினிமாவிலிருந்து நான் ஒதுங்கி இருந்ததற்கு காரணம், கன்னடத்தில் நான் பிஸியாக இருந்ததுதான். தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கக் கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதையாக இருந்தால் கண்டிப்பாக தொடர்ந்து தமிழிலும் நடிப்பேன்.
சசிகுமார் ஸார் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குநராகவும் இருப்பதால், அவரிடமிருந்து நிறைய விஷயங்கள், நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். மேலும் தமிழில் மீண்டும் நடித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி…” என்றார்.