Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

சினிமா வரலாறு-25 – நடிகை பானுமதியின் காதல் கதை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரையுலகம் எத்தனையோ நடிகைகளை சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லோரிடமிருந்தும் முற்றிலும் மாறுபட்டவர் பானுமதி. நடிகைகளில் அவர் ஒரு ‘துருவ நட்சத்திரம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுத்தாளர், பாடகி, இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, என்று தமிழ், தெலுங்கு சினிமாக்களின் பல தளங்களில் வெற்றிகரமாகத் திகழ்ந்த பானுமதி ‘நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகை’ என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்டவர்.

படங்களில்  நடிக்கும்போது  காட்சிக்காகக்கூட  பானுமதியைத்  தொட்டுப் பேச அவரது கதாநாயகர்கள் தயங்குவார்களாம். பல கதாநாயகர்கள், ‘இந்தக் காட்சியில் இந்த வசனத்தைப் பேசும்போது உங்களது கையைத் தொடுவேன்’ என்று அவரிடம் முன்னதாகவே சொல்லிவிட்டுதான்  அவரது கையைத் தொடுவார்களாம்.

‘தவறு’ என்று மனதுக்குப் பட்டுவிட்டால் அதைத் தட்டிக் கேட்கத் தயங்காத கண்ணியமிக்க ஒரு நடிகையாகத் திகழ்ந்தவர் பானுமதி .

எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்க பல இயக்குநர்களும்,  தயாரிப்பாளர்களும் தயங்கிய காலக்கட்டத்தில் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்று உரிமையோடு அவரை அழைத்த ஒரே நடிகை பானுமதி மட்டுமே. எம்.ஜி.ஆரிடம் எந்த அளவு பானுமதிக்கு உரிமை இருந்தது என்பதை விளக்க அவருடன் ஒரு திரைப்படத்தில் பானுமதி நடித்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   

வாள்  சண்டை போட்டு  நம்பியாரிடம் இருந்து பானுமதியை எம்.ஜி.ஆர்., மீட்பது போல ஒரு காட்சி அன்று படமாக்கப்பட்டது.  அந்தச்  சண்டை நடக்கும்போது பானுமதி அடிக்கடி தனது பயத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்தக் காட்சி ஒரு முறை அல்ல.. இரு முறை அல்ல. பல முறை படமாக்கப்பட்டும் சரியாக அமையவில்லை.

இதனால் பயந்த மாதிரி திரும்பத் திரும்ப நடித்த பானுமதி சற்றுக் கோபத்துடன் எம்.ஜி.ஆரை அழைத்தார். “மிஸ்டர் ராமச்சந்திரன் அந்த வாளை  என்னிடம் கொடுங்கள். நானே சண்டை போட்டு என்னை மீட்டுக் கொள்கிறேன்” என்றார். 

இப்படி பேசக் கூடிய துணிச்சல் யாருக்கு வரும்…? 

இப்படி படப்பிடிப்பு தளங்களில் இரும்பாக இருந்த பானுமதி காதல் வசப்பட்டபோது அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதைகளிலோ, சினிமாவிலோகூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பானுமதியின் காதல் கதை, ஒரு அழுத்தமான  காதல் கதை.

பானுமதியின் தந்தையான பொம்மராஜூ வெங்கட சுப்பையாவை  ஒரு இசைப் பிரியர் என்று சொல்வதைவிட இசைப் பைத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும். தன்னுடைய மகளான பானுமதியின்  குரல் இந்தியா முழுவதும் கேட்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருந்த அவர் சிறுவயது முதலே பானுமதிக்கு  கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக் கொடுத்தார்.

அவருடைய நெருங்கிய நண்பரான இயக்குநர் பி.புல்லையா அவர்களின் இயக்கத்தில் உருவான ‘வர விக்ரயம்’ என்ற தெலுங்குத்  திரைப்படத்தில் நடிக்க பானுமதியை அவர் அனுமதித்ததற்குக்கூட முக்கியமான காரணம் அவரது இசை ஆர்வம்தான்.

தன் மகள் ஒரு பாட்டுக் கச்சேரியில் பாடினால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள்தான் அவரது  பாட்டைக் கேட்க முடியும். ஆனால், சினிமாவில் பாடினால் லட்சக்கணக்கானவர் ஒரே நேரத்தில் தனது மகளின் குரலைக் கேட்க முடியுமே என்ற எண்ணத்தில்தான் பானுமதியை படத்தில் நடிக்க வைத்தார் அவரது தந்தை.

இருப்பினும் பானுமதியுடன் படத்தில் நடிக்கின்ற ஆண் நடிகர்கள் அவரைத் தொட்டுப் பேசுவது போலவோ, நெருக்கமாக நின்று நடிப்பது போலவோ எந்தக் காட்சிகளும் இருக்கக் கூடாது என்பது உட்பட அவர் விதித்த பல நிபந்தனைகளுக்கு படத் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்ட பிறகே அந்தப் படத்தில் பானுமதி நடிக்க அவர் தனது ஒப்புதலைத் தந்தார்.

அத்தனை நிபந்தனைகள் விதித்தாலும் அந்த சினிமாதான் தனது மகளைத் தன்னிடமிருந்து ஒரு காலக்கட்டத்தில் பிரிக்கப் போகிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது.

பானுமதி நடித்த முதல் படமே மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த பானுமதி 1943-ம் ஆண்டில் ‘கிருஷ்ண பிரேமா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார்.

அந்தப் படத்தை ‘கிருஷ்ண பிரேமா’ என்று சொல்வதற்குப் பதில் ‘ராமகிருஷ்ண பிரேமம்’ என்று சொல்லலாம் என்று பானுமதி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்கிறது.

தனது காதல் கணவரான ராமகிருஷ்ணாவை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் முதன்முதலாக சந்தித்தார் பானுமதி.

முதல் சந்திப்பிலேயே பானுமதியின் கவனத்தை ஈர்த்தார் ராமகிருஷ்ணா. படப்பிடிப்பு தளத்தில்  ஓடி, ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்த சுறுசுறுப்பான, அழகான வாலிபன் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்ட அவர் படப்பிடிப்பு  இடைவேளைகளில் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கத் தொடங்கினார்.

அந்தப் படத்தைவிட பானுமதிக்கு  ராமகிருஷ்ணா மேல் இருந்த காதல் வேகமாக வளர்ந்தது. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்வென்றால் படத்தின் நாயகியான பானுமதி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி அந்த ராமகிருஷ்ணாவுக்குக் கொஞ்சம்கூட தெரியாது.

அப்போது பானுமதி பருவ வயதிலிருந்ததால் அவரது தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினார். இனியும் தனது காதலைப் பற்றி வீட்டில் சொல்லாமல் இருப்பது சரியல்ல என்று எண்ணிய பானுமதி தனது மூத்த சகோதரியிடம் தான் ராமகிருஷ்ணா என்ற உதவி இயக்குநரைக் காதலிக்கின்ற விவரத்தைக் கூறினார்.

பானுமதியின் காதல் விவகாரம் தெரிந்ததும் எல்லா  அப்பாக்களையும் போல பானுமதியின் அப்பாவான வெங்கட சுப்பையாவும் ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது என்றார். சினிமாவில் பணிபுரியும் ஒருவருக்கு தனது மகளைத் திருமணம் செய்து கொடுப்பதில் அவருக்கு ஒரு சதவிகிதம்கூட உடன்பாடில்லை.

ஆனால் பானுமதி தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றதால் வேறு வழியின்றி  திருமணம் பற்றி பேச ராமகிருஷ்ணாவை தனது வீட்டுக்கு அழைத்தார் பானுமதியின் தந்தை.

அளவில்லாத நடிப்புத் திறனும், அழகும் கொண்ட பானுமதி என்ற  கதாநாயகி தன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் உதவி இயக்குநரான  ராமகிருஷ்ணவுக்கு  அப்போதுதான் தெரிந்தது.

பானுமதி எப்படிப்பட்ட பண்பான நடிகை  என்பதை அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அவர் நன்கு அறிந்திருந்தார். ஆகவே அவர் தன்னைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பானுமதியை மனைவியாக ஏற்றுக் கொள்ள அவர் பெரிதும் விரும்பினார் என்றாலும்   அதற்கு சில நிபந்தனைகளை விதித்தார்.

“நான் அடிப்படையில் ஒரு ஏழை. அப்படிப்பட்ட நான் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் கதாநாயகியான பானுமதியை திருமணம் செய்து கொண்ட பிறகு நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் என்னுடைய சில நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

முதலில் என்னுடைய நிபந்தனைகள் என்னென்ன என்பதை உங்களுக்குச் சொல்கிறேன் . அவை எல்லாம்  உங்களுக்கு ஒத்து வருமா என்று பாருங்கள்..” என்று சொல்லிவிட்டு தனது நிபந்தனைகளைப் பட்டியலிடத் தொடங்கினார் அவர்.

அவரது முதல் நிபந்தனையே இடி மாதிரி வேங்கட  சுப்பையாவின் தலையில் இறங்கியது.

“என்னைத் திருமணம் செய்து கொண்ட பிறகு உங்களது பெண் கச்சேரிகளில் பாடவோ, சினிமாவில் நடிக்கவோ கூடாது. இவை எல்லாவற்றிற்கும் அறவே முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டும்..” என்று அவர் சொன்னவுடன் பானுமதியின் தந்தையான வெங்கட சுப்பையாவிற்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது. பல்லைக் கடித்தார். பின்னர் அந்த அறையை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார்.

அவரது உறவினர்களில் சிலர் வெங்கடசுப்பையாவை சமாதானப்படுத்தினர். “சினிமாவில் பானுமதி நடிப்பதைத்தான் அவர் விரும்ப மாட்டார். ஆனால், பானுமதி கச்சேரிகளில் பாடக் கூடாது என்ற முடிவில்  அவர் உறுதியாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே பாடுவதற்கு மட்டும் அவரிடம் அனுமதி கேட்டு வாங்கிக் கொள்ளலாம் வாருங்கள்..” என்று கூறி அவரை மீண்டும் வீட்டுக்குள் அவர்கள் அழைத்து வந்தார்கள்.

“நீங்கள் சொன்னபடி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடச் சொல்கிறேன் . அவர் மிகப் பெரிய பாடகியாக வர வேண்டும் என்பது எனது வாழ்நாள் லட்சியம் என்பதால் குறைந்தபட்சம் அவர் பாட்டுக் கச்சேரி நடத்துவதற்காகவது நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று ராமகிருஷ்ணாவை வேண்டிக் கேட்டுக் கொண்டார் பானுமதியின் தந்தை.

அதற்கு ராமகிருஷ்ணா என்ன பதில் சொன்னார்…?

பதில் அடுத்தப் பதிவில்..!!!

- Advertisement -

Read more

Local News