சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு, இது மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது. எவ்வளவு வற்புறுத்தினாலும் இனிமேல் எதுவும் நடக்காது என்பதால் மிகவும் சோர்ந்து போயுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய உறவினரும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரனிடம் ரஜினியின் இந்த அரசியல் முடிவு பற்றிக் கேட்டபோது, “இதில் நான் என்ன கருத்து சொல்ல முடியும்..? ரஜினி என்னைக் கேட்டுவிட்டா அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார்..? அது அவரது சொந்த முடிவு.
இப்போது தனது உடல் நலனைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவை எடுத்துவிட்டார். இதில் எனக்கு வருத்தமும் இல்லை.. சந்தோஷமும் இல்லை. ரஜினி என்ற நல்ல மனிதர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ வேண்டும். இதுதான் எனது ஆசை..” என்றார் ஒய்.ஜி.மகேந்திரன்.