இங்கிலாந்தில் இருந்து தான் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியில் இருந்து விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “வரி என்பது நன்கொடை அல்ல; கட்டாய பங்களிப்பு. திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் ஹீரோவாக இருங்கள்..” என்று விஜய்க்கு அறிவுறுத்தி அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
இந்தத் தீர்ப்பின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது. இந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்ட வாசகங்கள் தனது பெருமைக்கு இழுக்காகிறது என்பதை உணர்ந்த நடிகர் விஜய், இதை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மேல்முறையீட்டு மனுவில் “நான் வாங்கிய காருக்கான வரியின் மீதத் தொகையை செலுத்த நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இந்த வழக்கில் எனக்கு அளிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் தீர்ப்பில் என்னைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றையும் நீக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு தனி நீதிபதியின் தீர்ப்பு நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், “இது வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு முன்புதான் விசாரிக்கப்பட வேண்டும். அதனால் வரி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அமர்வுக்கு முன் இந்த மனுவை பட்டியலிட வேண்டும்..” என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து இந்த மனு நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு முன்பு விரைவில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.