லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் உடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டது தொடர்பான புகைப்படங்களையும் அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக, லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி-2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது, தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.