தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சித்தார்த், ‘மிஸ் யூ’ படத்தை தொடர்ந்து ‘3 பிஎச்கே’ என்ற படத்தில் நடித்துள்ளார். இது சித்தார்தின் 40-வது படம் ஆகும். இந்தப் படத்தை ‘8 தோட்டாக்கள்’, திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சித்தார்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. மிடில் கிளாஸ் குடும்பங்கள் தங்களுக்கென ஒரு 3 பிஎச்கே வீடு வாங்கும் கனவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியான டிரெய்லர், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் ‘3 பிஎச்கே’ படக்குழுவை பாராட்டி ஒரு பதிவு பகிர்ந்துள்ளார். அதில் அவர், “ஒரு வீடு… ஒரு கனவு… தனக்கென ஒரு வீடு, சந்தோஷமும் சிரிப்பும் நிறைந்த இனிய இடம்! தம்பி அருண் விஷ்வா மற்றும் அவரது அருமையான குழுவிற்கு இந்த ‘3BHK’ உணர்ச்சி நிறைந்த பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! ஜூலை 4-ம் தேதி நம் இதயங்களை ஆழமாக தொட்டுச் செல்லவுள்ள இந்தச் சிறந்த கதை வெற்றியின் வானில் பிரகாசமாக ஒளிரட்டும். உங்கள் கனவு நனவாகி உயர்ந்த வெற்றியை அடையட்டும்!” என்று தெரிவித்துள்ளார்.