சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதில், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.




இந்த திரைப்படம், 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. தற்போது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன.
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, நடிகர் சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு, ‘பராசக்தி’ படப்பிடிப்பு தளத்தில், இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோருடன் இணைந்து, கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கான புகைப்படங்களை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. மேலும் பராசக்தி படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி பரிமாறும் வீடியோவை சுதா கொங்கரா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.