பிரபல தமிழ்த் திரைப்பட நடிகரான ஆர்.என்.ஆர்.மனோகர் திடீர் மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார்.அவருக்கு வயது 54.
இவர் தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான என்.ஆர்.இளங்கோவின் சகோதரராவார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். ‘கோலங்கள்’ படத்திற்கு வசனம் எழுதினார். மேலும், அந்த படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்தார். அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.
நகுல், சுனைனா நடிப்பில் வெளியான மாசிலாமணி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் மனோகர். மேலும், ‘வேலூர் மாவட்டம்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அஜித்துடன் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் மனோகர். மேலும் ‘தில்’, ‘சலீம்’, ‘கவண்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘காஞ்சனா-3’, ‘சீறு’, ‘பூமி’, ‘காப்பான்’, ‘டெடி’ போன்ற பல படங்களில் வில்லன் வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனோகர் இன்று காலை 8.30 மணிக்கு அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
சில வருடங்களுக்கு முன் இவரது இளம் வயது மகன் தனியார் பள்ளி ஒன்றின் நீச்சல் குளத்தில் இறந்தது நினைவிருக்கலாம்.