சமீபத்தில் டிரெயிலர் வெளியானவுடனேயே இது என்ன மாதிரியான படம் என்கிற ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் டிரெயிலர்.
காரணம் டிரெயிலரில் இன்ன விஷயத்தைத்தான் சொல்ல வருகிறோம் என்பதை வெளிக்காட்டாத அளவுக்கு டிரெயிலரை கட் செய்திருந்தாலும் ஆன்மீகம் என்னும் பெயரில் சாமியார்கள் செய்யும் அட்டகாசத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்திருப்பதுபோல் தெரிகிறது.
கூடவே அரசியலும் கலந்திருக்கிறது. இதனால், ‘ஆர்.ஜே.பாலாஜி அரசியலுக்கு அடி போடுகிறாரா?’ என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பாலாஜி, “எட்டாவது படிக்கும்போது நீ என்னவாக விரும்புகிறாய்..?” என்று பள்ளி ஆசிரியர் கேட்டார். அப்போது “அரசியல்வாதியாக வர விரும்புகிறேன்…” என்பது என் பதிலாக இருந்தது. இப்போது விவரம் தெரிந்ததற்குப் பின்னாலே அரசியல் எனக்கு பிடிக்காமலேயே போய்விட்டது…” என்கிறார் பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி.
“இயக்குநர் சரவணன் உடன் இணைந்து நான் இயக்கியுள்ள முதல் திரைப்படமான இந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நயன்தாரா, மூக்குத்தி அம்மன் ஆக நடித்திருக்கிறார். “மூக்குத்தி அம்மன் வேடத்தில் நயன்தாராவை பார்த்தபோது எங்களுடைய மொத்த யூனிட்டும் பிரம்மித்துப் போய் நின்றது. அந்த அளவிற்கு அம்மனின் பாடம் கனகச்சிதமாக நயன்தாராவுக்கு பொருந்தியிருந்தது” என்று பெருமிதப்படுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
கூடவே, “மூக்குத்தி அம்மன்’ ஒரு பக்திப் படமாக இருந்தாலும் சமூகத்துக்கு தேவையான நல்ல சில கருத்துக்களையும் இருக்கிறேன்” என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.