Friday, April 12, 2024

‘போக்கிரி’ படத்தில் நெப்போலியன் இடம் பிடித்தது எப்படி..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிகர் விஜய்-நயன்தாராவின் நடிப்பில் 2007-ம் ஆண்டு உருவான திரைப்படம் ‘போக்கிரி’.

இந்தப் படத்தில் நடிகர் நெப்போலியன் ஏற்றிருந்த ஒரு கதாபாத்திரம் அப்போதே பத்திரிகையாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்தப் படம் வெளியான பின்பு பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே சின்ன இடைவெளி ஏற்பட்டதைப் போன்ற சூழல் தென்பட்டது.

பின்பு இதற்காகவே நடிகர் நெப்போலியன் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். ஒரு நிகழ்ச்சி மேடையில் “அது அந்தக் கதைக்காக பேசப்பட்ட வசனங்கள்” என்றும் கூறினார்.

உண்மையில் அந்தப் படத்தில் தான் எப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டேன் என்பது பற்றி இப்போது ஒரு பேட்டியில் நடிகர் நெப்போலியனே கூறியிருக்கிறார்.

“நண்பர் பிரபுதேவாவை முதல் முறையாக நான் விஜயகாந்துடன் நடித்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பார்த்திருக்கிறேன். அப்போது விஜயகாந்துக்கு பிரபுதேவா நடனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரைச் சந்தித்துப் பேசியிருந்தேன்.

அதன் பிறகு சில மாதங்கள் அவரை நான் பார்க்கவேயில்லை. அவர் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி அது வெற்றியடைந்ததையடுத்து தமிழிலும் படம் இயக்க வந்தார். அப்போதுதான் 2006-வது வருஷம் அவர் என்னைப் பார்க்க வந்தார்.

“நான் ஒரு படத்தைத் தமிழ்ல இயக்கப் போறேன். அதுல நீங்க நடிக்கணும்”ன்னு கேட்டார். “சரி.. கதையைச் சொல்லுங்க…” என்றேன். அப்புறம் கதையைச் சொன்னார்.

“இதுல எனக்கு எந்தக் கேரக்டர்..?”ன்னு கேட்டேன். “போலீஸ் கமிஷனர் ரோல்” என்றார். “அதுக்கெதுக்கு நானு..? இதுக்குத்தான் இங்க நிறைய பேர் இருக்காங்களே?..”ன்னு கேட்டேன். இல்ல. “நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன்…” என்றார்.

நான் இன்னொரு கேரக்டரை கேட்டேன். “அதுக்கு நாசரை புக் பண்ணிட்டேன்” என்றார். இன்னொரு கேரக்டரையும் கேட்டேன். “அதுல பிரகாஷ்ராஜ் நடிக்கப் போறார்…” என்றார்.

“எல்லாரையும் புக் பண்ணிட்டு கடைசியா வந்திருக்கீங்களா…?” என்றேன். சிரித்தார். “எனக்கு இதுல ஒரு கேரக்டரை மாத்திக் கொடுங்களேன்…” என்றேன். பிரபுதேவா அதற்கு மறுத்துவிட்டார். “இந்த போலீஸ் கமிஷனர் ரோல் ஒரு காட்சில பத்திரிகையாளர்களைக் கண்டிக்கிற மாதிரி பேசணும். அதுனால அவங்க அது மாதிரி பேச முடியாதுன்னு மறுத்துட்டாங்க. அதுனாலதான் இதை உங்ககிட்ட கொடுக்குறேன்” என்றார். “இந்த ஒரு வார்த்தை போதும். இதுக்காகவே நான் நடிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அதில் நடித்தேன்.

உண்மையில் பிரபுதேவா சொன்னது போலவே அந்தப் படத்தில் பத்திரிகையாளர்களுக்கும், போலீஸ் கமிஷனரான எனக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுவதுபோல காட்சி இருந்தது. அதில் நான் நடித்திருந்தேன்.

படத்தைப் பார்த்த பின்பு பலரும் நினைத்ததை போல பத்திரிகையாளர்களுக்கும், எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. அவர்களே என்னிடத்தில் வந்து கை கொடுத்து பாராட்டினார்கள்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் நெப்போலியன்.

- Advertisement -

Read more

Local News