நடிகர் மோகன்லால் கடந்த ஆண்டு நடித்த மலைக்கோட்டை வாலிபன் மற்றும் அவர் இயக்கியும் நடித்த பரோஸ் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த வருடத்தில் அவர் நடித்த எம்புரான் மற்றும் தொடரும் ஆகிய இரண்டு படங்களும் பாராட்டை பெற்ற வெற்றிப்படங்களாக மாறியுள்ளன. எம்புரான் படம் சில சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும், 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது வெளியான தொடரும் திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று, குறுகிய காலத்திலேயே 100 கோடி வசூலையும் கடந்துள்ளது.

இந்த வெற்றிகளை நினைவுகூர்ந்து கொண்டாட விரும்பிய மோகன்லால் ரசிகர்கள் அமைப்பான அனைத்திந்திய கேரளா ரசிகர்கள் மன்றம், விழா ஒன்றை ஏற்பாடு செய்ய முடிவு செய்தது. இதனை மோகன்லாலிடம் தெரிவிக்க, அவர் உடனடியாக ஒப்புதல் அளித்தார். இதன்படி சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், அவர் நடித்து வரும் ஹிருதயபூர்வம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருந்த நேரத்தில், அதே ஹோட்டலில் ரசிகர் மன்றத்தினர் வெற்றிக் கொண்டாட்ட விழாவை நடத்தியுள்ளனர்.
இவ்விழாவில், படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குனர் தருண் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். மோகன்லால் விழாவில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் கேக் வெட்டி, சில ரசிகர்களுக்கு ஊட்டியும் வைத்தார். இப்பட இயக்குனர் தருண் மூர்த்தி, அவரிடம் ஆசையாக கேட்க, மோகன்லால் அவரை அன்புடன் முத்தமிட்டுச் சந்தோஷப்படுத்தினார்.