1980-களின் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக்கின் திருமணம் அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ்த் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனெனில் அவருடன் நடிக்கும் அனைத்து ஹீரோயின்களுடனும் இணைத்து வைத்து கிசுகிசுக்கும் அளவுக்கு கார்த்திக்கின் செயல்பாடுகள் இருந்ததால்… ஒரேயொரு படத்தில் நடித்தவுடனேயே அந்த நாயகியுடன் கார்த்திக்கின் கல்யாணம் முடிந்தது என்பதை அப்போதைய திரையுலகத்தினரால் நம்ப முடியவில்லை.
கார்த்திக்கும் அவருடைய காதல் மனைவியான ராகினியும் நடித்த ‘சோலைக்குயில்’ படத்தின் தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி இது குறித்து விளக்கமாக பேட்டியளித்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரான சித்ரா லட்சுமணனின் ‘டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலு’க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது குறித்து விரிவாக அவர் பேசியுள்ளார்.
அது இங்கே :
“நான் தயாரித்த ‘சோலைக்குயில்’ படத்தின் நாயகியாக ராகினியை இயக்குநர் ராஜன்தான் புக் செய்தார். ராகினியின் அண்ணன், இயக்குநர் ராஜனின் நெருங்கிய நண்பர். அந்த வகையில் ஏற்கெனவே அவருக்கு ராகினியைத் தெரியும் என்பதால் அவரை பரிந்துரை செய்தார். நானும் அதனை ஏற்றுக் கொண்டேன்.
‘சோலைக்குயில்’ படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக 10 நாட்கள் சென்னையில் தி.நகரில் உள்ள முத்துராமன் திருமண மண்டபத்தில் நடனப் பயிற்சி ராகினிக்கு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக ராகினி சென்னை வந்து என்னுடைய வீட்டில் தங்கியிருந்தார். சுந்தரம் மாஸ்டர்தான் ராகினிக்கு நடனப் பயிற்சியளித்தார்.
ரிகர்சல் துவங்கிய முதல் நாளே தம்பி கார்த்திக் கல்யாண மண்டபத்திற்கு வந்தார். என்னிடம் “சித்தப்பா ஒரு பத்து நிமிஷம்தான் இருப்பேன். பார்த்துட்டு போயிருவேன்…” என்று சொன்னார்.
இந்தக் கல்யாண மண்டபத்துலதான் ராகினியை கார்த்திக் முதன்முதலா சந்திச்சார். பார்த்தவுடனேயே இரண்டு பேருக்கும் பத்திக்கிச்சு போலிருக்கு. பத்து நிமிஷத்துல போயிருவேன்னு சொன்ன கார்த்திக் ஒரு மணி நேரமாகியும் போகலை. சுந்தரம் மாஸ்டர் வந்து “ரிகர்சலை கண்டினியூ பண்ணப் போறேன்”னார். “கார்த்திக் போயிருவாப்புலயே.. பார்த்துக்குங்க…” என்று நான் சொன்னேன். அதுக்கு சுந்தரம், “ரிகச்ரலை தொடரச் சொன்னதே கார்த்திக்குதான்…” என்றார். அப்பவே எனக்கு புரிஞ்சு போச்சு.. பய விழுந்துட்டான்னு.
கார்த்திக்கின் ராசி அவருக்கு காதலிகள் வரிசையாக வந்தார்கள். அவருடைய சிரிப்பு ஒன்றே போதும்.. பல நடிகைகள் அவரைக் காதலித்தார்கள். அந்தக் காதலெல்லாம் அந்த ஒரு படத்தோட முடிஞ்சிரும். அடுத்து வேற படத்துல நடிக்கப் போவார். அங்க வேற நடிகை இருப்பார். அப்புறம் அது வேற காதலாகும்.. இது இப்படியே தொடரும். இது எனக்கும் தெரியும். ஆனால் இந்தக் காதல் கல்யாணத்தில் போய் முடியும்ன்னு எனக்கே தெரியாது.
‘சோலைக்குயில்’ படம் முழுவதும் கோத்தகிரிலதான் ஷூட் செஞ்சோம். அங்க ‘ரமேஷ் லாட்ஜ்’ன்னு ஒரேயொரு லாட்ஜ்தான் இருந்தது. அங்கதான் எல்லாரும் தங்கியிருந்தோம். ஆனாலும், இடம் பத்தலை. இதுல எஸ்.எஸ்.சந்திரனும், கோவை சரளாவும் வேறொரு கெஸ்ட் ஹவுஸுக்கு போயிட்டாங்க.
கார்த்திக்கும் ‘எனக்கு இது செட்டாகுதுப்பா’ என்றான். அதுனால அவனுக்காக தொண்டமான் கெஸ்ட் ஹவுஸ்ல பேசி ஒரு ரூம் புக் பண்ணிக் கொடு்த்தேன். அங்க போன பின்னாடி கார்த்திக் என்கிட்ட.. ‘அந்தப் பொண்ணு மட்டும் தனியா அங்க இருக்குமே.. எதுக்கு அதை தனியா விட்டுட்டு.. அதையும் இங்கயே கொண்டு வந்துவிட்ருங்க..’ என்றான். சரி.. என்று ராகினிக்கும் அங்கயே ரூம் புக் பண்ணி கொண்டு வந்துவிட்டுட்டேன். இப்படி ஒரு தயாரிப்பாளரா இருந்துட்டு செய்யக் கூடாத வேலையையெல்லாம் செஞ்சிருக்கேன்..
கோத்தகிரில திடீர்ன்னு மழை போட்டுத் தள்ளிருச்சு.. ஷூட்டிங் நின்னு போச்சு.. அங்க பக்கத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு. ‘அந்தக் கோவில்ல பொங்கல் வைச்சு வேண்டிக்கிட்டீங்கன்னா மழை நிச்சயம் நிக்கும்’ன்னு அங்க இருந்தவங்க சொன்னாங்க.
சரி.. இதையும் செஞ்சிருவோமேன்னுட்டு.. பொங்கல் வைக்க எல்லா வேலையையும் செஞ்சோம். அப்போ அந்த அம்மனுக்காக பூவெல்லாம் கட்டி கொண்டு வந்தோம். அந்தப் பூவையெல்லாம் ராகினியும் கேட்டுவிட்டுச்சு. கொடுத்துவிட்டோம்.
அதோட அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் காட்சில ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குற மாதிரி சீன்ஸ் இருக்கு. இதுக்காக பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, சேலையெல்லாம் ஏற்கெனவே வாங்கி வைச்சிருந்தோம். அதை எனக்குத் தெரியாமல் கார்த்திக் எப்படியோ வாங்கியிருக்கான்.
அன்னிக்கு அந்த பொங்கல் வைக்குற சமயத்துல கார்த்திக்கும், ராகினியும் பட்டு வேட்டி, பட்டு சட்டை, கல்யாண சேலையெல்லாம் கட்டிக்கிட்டு வந்தாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. இன்னிக்கு ஷூட்டிங் இல்லையே.. இது கிளைமாக்ஸ்ல போட வேண்டிய காஸ்ட்யூம்ஸ் ஆச்சேன்னு யோசிச்சேன்.
வந்தவங்க கைல கொண்டு வந்த மல்லிகைப் பூ மாலையை அப்படியே அம்மன் காலடில வைக்கச் சொன்னாங்க.. நம்ம காந்திமதி அம்மாதான் அதை வாங்கி அம்மன் காலடில வைச்சாங்க.. வைச்சிட்டு கார்த்திக்கைப் பார்த்து ‘மருமவனோ போற போக்கு சரியாயில்லை.. அந்தத் திருச்சி வெக்காலியம்மன்தான் உன்னைக் காப்பாத்தணும்’னு சொன்னாங்க.
அப்புறம் படையலெல்லாம் வைச்ச பின்னாடி அந்தப் பூவை எடுத்துப் பிய்ச்சு எல்லாருக்கும் கொடுக்கலாம்ன்னு காந்திமதியக்கா நினைச்சாங்க. அப்போ அந்தப் பொண்ணு ராகினி ‘அந்தப் பூவையெல்லாம் கொடுங்க.. எங்க கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு சாமி சிலையிருக்கு. அதுக்குப் போட்டுவிடுறேன்’னு சொல்லுச்சு. சரின்னு அந்த மாலையைக் கொடுத்துட்டோம். அப்புறம் நாங்க எல்லோரும் லாட்ஜூக்கு திரும்பிட்டோம்.. இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.
இதுக்கப்புறமா எங்களுக்கே தெரியாமல் அவங்க ரெண்டு பேருக்கும் அதே இடத்துல கல்யாணம் நடந்திருக்கு.. அந்தப் பூவுக்குள்ள தாலியை ஒளிச்சு வைச்சிருந்திருக்கான் கார்த்திக். இதெல்லாம் பின்னாடிதான் எனக்குத் தெரியும்.
மழையெல்லாம் நின்ன பின்னாடி.. பாட்டு சீன் சூட்டிங் நடந்துச்சு.. கலா மாஸ்டர்தான் டான்ஸ் சொல்லிக் கொடுக்க வந்திருந்தார். அப்போ ராகினி தாலியைக் கழட்டி தன்னோட இடுப்புல மறைவா கட்டியிருந்தாங்க. ஆனால், இதை கலா பார்த்துட்டாங்க. ‘இதென்ன..?’ என்று கேட்டதற்கு ‘ச்சும்மா.. மந்திரிச்ச கயிறு’ என்று சொல்லி ராகினி சமாளிச்சிட்டாங்க.
ஒரு வழியா அங்க ஷூட்டிங்கை முடிச்சிட்டு சென்னைக்குத் திரும்பலாம்ன்னு பிளான் பண்ணினோம். அப்போ படத்தோட புரொடெக்சன் மேனேஜர் என்னோட மச்சினன்தான். அவன்கிட்ட தனக்கும், ராகினிக்கும் டிரெயின்ல பர்ஸ்ட் கிளாஸ்ல சீட் புக் பண்ணச் சொல்லியிருக்கான் கார்த்திக். இது எனக்குத் தெரியாது.
ராகினி அதே ஊர்க்கார பெண்தானே. இங்க இருந்திட்டுதான் பின்னாடி சென்னைக்கு வரும்ன்னு நினைச்சேன். ஏன்னா சென்னைல இன்னும் 4 நாள் ஷூட்டிங் பாக்கியிருந்துச்சு. ஆனால் அந்தப் பொண்ணு என்கிட்ட ‘உங்க காரை கொடுங்க ஸார். என்னை கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இறக்கிவிட்ர சொல்லுங்க’ன்னு சொல்லுச்சு.. நானும் ‘சரி’ன்னு சொல்லி என் காரை அவங்ககிட்ட கொடுத்திட்டேன்.
நானும், என் மேனேஜரும் கோத்தகிரில இருந்து பஸ்ல வர்றோம். மழை கொட்டுது. அந்தப் பஸ்ஸும் ஒழுகுது. பஸ்ஸுக்குள்ளேயே நிறைய பேர் குடையை பிடிச்சிருக்காங்க. அப்படியிருக்கு நிலைமை.
அப்போ எங்க பஸ்ஸை ஒட்டியே என்னோட காரும் வருது. காரை கார்த்திக் ஓட்டிக்கிட்டு வர்றான்.. ராகினி பக்கத்துல உக்காந்திருக்கு. இதைப் பார்த்தவுடனேயே எனக்குப் புரிஞ்சு போச்சு.. சரி.. பய என்னமோ பண்ணிட்டான்ன்னு நினைச்சேன்.
நான் கோத்தகிரில வந்து சென்னைக்கு வர்றதுக்குள்ள அவன் சென்னைக்கு வந்து ராகினியை கொண்டு வந்து என் வீட்ல விட்டுட்டு அவன் வீட்டுக்குப் போயிட்டான். நான் வீட்டுக்கு வந்து பார்த்தால் ராகினி என் வீட்டில் உக்காந்திருக்கு. எனக்கும் அதிர்ச்சியாயிருந்துச்சு. சரி.. இன்னும் 4 நாள் ஷூட்டிங் இருக்கே.. அதுல நடிச்சிட்டுப் போகட்டும்ன்னு விட்டுட்டேன்.
ஆனால் என் வீட்டுக்காரம்மா ‘என்ன விஷயம்’ன்னு கேட்டப்போ ராகினி தனக்கும், கார்த்திக்கும் கல்யாணம் ஆனா விஷயத்தையெல்லாம் சொல்லிருச்சு. அப்புறம்தான் எங்களுக்கே அவங்களுக்கு கல்யாணம் நடந்த விஷயம் தெரியும். சரி.. என்ன செய்றது.. இவன் மத்த ஹீரோக்கள் மாதிரியில்லையே.. அண்ணன் மவனா வேற போயிட்டான். அதனால விட்ருவோம்ன்னு ஏத்துக்கிட்டேன்.
அப்படியே என் வீட்ல அந்தப் பொண்ணுகூட 30 நாள் இருந்துட்டான் கார்த்திக். அங்க போட்ட வித்துல பிறந்தவன்தான் இன்னிக்கு நடிகனா இருக்குற கவுதம் கார்த்திக்..” என்று நீட்டமாக ஒரு வரலாறையே சொல்லி முடித்தார் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.