உண்மையான நட்பைப் போற்றுவதிலும், பொக்கிஷமாகப் பாதுகாப்பதிலும் பெயர் பெற்ற நடிகரான கார்த்தி, சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக் கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
கார்த்தியின் ‘பருத்தி வீரன்’, ‘நான் மகான் அல்ல’, ‘பையா’, ‘பிரியாணி’ மற்றும் அடுத்து வெளியாகவிருக்கும் ‘விருமன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.
கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த தனது நண்பன் யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக் கடிகாரத்தைத் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியன்று ‘விருமன்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது.
ஏற்கனவே, ‘விருமானு’க்காக யுவன் இசையமைத்து சித் ஸ்ரீராம் பாடிய ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடலின் அழகான முன்னோட்டம், சுமார் 3.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று இன்னும் யூ டியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
‘விருமன்’ தவிர, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ என்ற இரண்டு திரைப்படங்களும் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ‘சர்தார்’ படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்புத் தரப்பு விரைவில் அறிவிக்கவுள்ளது.