‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2-ம் பாகம் தயாராகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் நேற்றைக்கு அறிவித்தார்.
சிலம்பரசன் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ.. அது போல் இந்தப் படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன்.
வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம்தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை.
நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க, கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். தமிழ்ப் படங்களைத் தூக்கி நிறுத்துவது தமிழ்ப் படங்கள்தான். தமிழ்ப் படங்களைக் கெடுப்பதும் தமிழ்ப் படங்கள்தான். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. நல்ல படங்களுக்கு மக்கள் நிச்சயமாக ஆதரவு தருவார்கள்.
சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பேயே கௌதம் என்னிடம் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..” என்றார்.