‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘கூட்டத்தில் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்த அசோக் செல்வனுக்கு சமீப காலமாக சுக்ர திசை நடக்கிறது.
தொடர்ந்து அவர் நாயகனாக நடித்து வரும் படங்களில் இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.
‘ஓ மை கடவுளே’ படத்தில் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோருடன் நடித்தார்.
‘மன்மத லீலை’ படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்ட் ஆகியோருடன் நடித்தார்.
‘வேழம்’ என்ற படத்தில் ஜனனி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ‘நித்தம் ஒரு வானம்’ என்ற படத்தில் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கி உள்ளார்.
படம் பற்றி இயக்குநர் ரா.கார்த்திக் பேசும்போது, “இரு ஒரு பயணக் கதை. படத்தில் நாயகனுக்கு ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அதில் இருந்து வெளிவர அவர் நீண்ட தூர பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். அந்தப் பயணம் அவருக்குள் என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதுதான் படம்.
3 காலக்கட்டங்களில் இந்தப் படத்தின் கதை நடக்கும், ஒவவொரு காலக்கட்டத்திற்கும் தனித்தனி ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். குற்றாலத்தில் தொடங்கி குளுமனாலியில் முடிகிற கதை இது. ‘ஆகாஷம்’ என்ற பெயரில் தெலுங்கிலும் வெளி வரவுள்ளது.” என்றார்.