கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் உருவாகி கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
சோழர் காலத்திய வரலாற்றை மையப்படுத்தி உருவானது இப்படம். ஆனால் இந்தப் படம் ‘பொன்னியின் செல்வனைப்’ போல ரசிகர்களைக் கவரவில்லை. பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்தது.
இது குறித்து இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நான் இயக்கிய எந்தப் படத்தையும் 2-ம் பாகத்தையும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து செய்யவில்லை. ஆனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயமாக தொடர்ந்து 4 பாகம்வரையிலும் அதனை எடுத்திருப்பேன்.
இந்தப் படத்துக்கு அப்போது ரசிகர்களிடையே பாராட்டும், வரவேற்பும், அங்கீகாரமும் கிடைக்காதது எனக்கு அதிக சோர்வையும், வருத்தத்தையும் தந்தது. ஆனால் இப்போது 2-ம் பாகங்கள் பல படங்களில் தொடர்வதால் இந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 2-ம் பாகத்தையும் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். இது அநேகமாக 2024-ம் ஆண்டு துவங்கும். இந்தப் படத்தில் சோழ அரசராக தனுஷ் நடிப்பார்..” என்றார் செல்வராகவன்.