Thursday, April 11, 2024

ஆற்றல் – சினிமா விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செவ்வந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விதார்த் நாயகனாக நடித்திருக்கிறார்.  

நாயகியாக ஸ்ரிதா, வில்லனாக வம்சி கிருஷ்ணா மற்றும்  சார்லி, வையாபுரி, விக்கி ஆகியோரும்  நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  – கொளஞ்சி  குமார், இசை – அஸ்வின்  ஹேமந்த், படத் தொகுப்பு – விஜய்  வேலுக்குட்டி, பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் – வீர சமர், எழுத்து, இயக்கம் – கே.எல்.கண்ணன்.

இந்தப் படத்தில் விதார்த்தோடு இணைந்து  ஒரு காரும் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறது. ஒரு கார்  எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ  முடியும்…? டெக்னலாஜியை வைத்து  எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும்  என்பது பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. 

மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆன விதார்த் ஒரு ஆட்டோமேட்டிக் கார் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த பிராஜெக்ட்டை முடிக்க அவருக்கு 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது.

இந்தச் சூழலில் விதார்த்தின் அப்பாவான சார்லி, மகனுக்கு உதவி செய்வதற்காக அவருக்கே தெரியாமல் ஒரு பைனான்சியரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்று வீட்டுக்கு வரும் வழியில் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். பணமும் பறி போகிறது.

ஒரு நாள் அந்த பைனான்சியர் விதார்த்தை அழைத்து சார்லி வாங்கிய 10 லட்சம் ரூபாய் கடன் விஷயத்தை சொல்கிறார். அப்போதுதான் விதார்த்துக்கே சார்லி தனக்காக கடன் வாங்கிய விஷயமே தெரிகிறது.

அந்த பைனான்சியரிடம் பேசிவிட்டு வரும் போது, பைக்கில் வரும் ஒரு கும்பல். ஒருவரை அடித்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை எடுத்துச் செல்கின்றனர். அப்போதுதான், தனது அப்பாவான சார்லிக்கும் இப்படித்தான் நடந்திருக்கும் என்பதை உணர்கிறார் விதார்த்.

இது விபத்து என்று போலீஸ் கேஸை முடித்துவிட்டதால், போலீஸை நம்பி பயனில்லை என்று நினைக்கும் விதார்த் தனது அப்பாவின் கொலைக்குக் காரணமான வில்லனை தேட ஆரம்பிக்கிறார். கண்டறிந்தாரா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஒரு த்ரில்லர் படமாகவும், அதற்குப் பிறகு வரும் சார்லி – ரமா – விதார்த் காட்சிகள் சென்டிமென்ட் படமாகவும், விதார்த் – ஷிரிதா ராவ் காட்சிகள் காதல் படமாகவும், விதார்த் கண்டுபிடிக்கும் ஆளில்லாமல் ஓடும் கார் காட்சிகள் பேன்டஸி படமாகவும் தடம் மாறிக் கொண்டே செல்கிறது. ஆனால், இந்த ஆர்வத்தை பரபரப்பாக்காமல் மெதுவாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.

அன்பான, கொஞ்சம் அமைதியான மகனாக விதார்த். அப்பா மீதுள்ள பாசத்தால் அவரைது மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்க ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். ஆனாலும் எப்போதுமே எதையோ பறி கொடுத்தவர் போலவே படம் முழுவதும் வலம் வருகிறார் விதார்த். காதல் காட்சிகளில் கொஞ்சம் முன்னேறியிருக்கிறார் விதார்த்.

கதாநாயகியாக ஷிரிதா ராவ். அவருடைய இரண்டு அழான கண்களே சிறப்பாக நடித்துள்ளன. சின்னச் சின்ன முக பாவங்களில் காதல் ரசனையைக் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் அநியாயத்திற்கு வெட்கப்பட்டுள்ளார்.

ஹெல்மெட் அணிந்து கொள்ளையடிக்கும் நான்கு இளைஞர்களும், அவரது தலைவனாக வம்சி கிருஷ்ணா நடித்துள்ளனர். இவருடன்  அரைகுறை ஆடையணிந்த ஒரு பெண் எப்போதும் வலம் வருவதெல்லாம் 1980-களின் வில்லன்களின் ஸ்கெட்ச் இயக்குநரே..!

சார்லி, ரமா, விக்னேஷ் காந்த், வித்யுலேகா ஆகியோர் சில காட்சிகளில் தத்தமது கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்துள்ளனர்.

இந்தக் கொள்ளையர்களின் வெறியாட்டத்தைப் இனிமேல் வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்ய வருபவர்களை தவறாகவே நினைக்க வேண்டி வரும்.

ஊரில் வழிப்பறி, கொள்ளைகள் நடந்தும் காவல்துறை இருக்கிறதா.. இல்லையா.. அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதையெல்லாம் இயக்குநர் காட்டவேயில்லை. ஹீரோவுக்கு உதவுவதைப் போல திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவில் பறவைப் பார்வைக் காட்சிகள்தான் அதிகம். அவை கதையோட்டத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன என்றாலும் இரவு நேரக் காட்சிகள் அசத்தல். அஸ்வின் ஹேமந்த்தின் இசை காதுகளை இடையூறு செய்யாமல் இருக்கிறது. விஜய் வேலுக்குட்டியின் படத் தொகுப்பில் படம் வேகமாக நகர்ந்துள்ளது. விக்கியின் சண்டை இயக்கத்தில் கார் துரத்தல் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சியும் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு சின்ன கதையை வைத்துக் கொண்டு அதை வித்தியாசமான திரைக்கதையில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் கே.எல்.கண்ணன். அதேசமயம், வில்லன்கள் தங்களது கொள்ளைக்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பம் பற்றிய அறிவையும் நமக்குக் காண்பித்திருக்கிறார்.

இயக்கம் சிறப்பாக இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் வேகம் இருந்திருந்தால் படத்தின் டைட்டிலுக்கேற்ற பெயர் ஒட்டு மொத்தப் படத்திற்கும் கிடைத்திருக்கும்.

RATING : 3.5 / 5

- Advertisement -

Read more

Local News