திரையுலகத்தில் தான் அறிமுகப்படுத்திய நடிகர் வடிவேலுவை சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் படங்களில் நடிக்க வைக்கவில்லை என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜா இது குறித்து அளித்துள்ள பேட்டியில், “ஒரு முறை நானும், ராஜ்கிரணும், ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மதுரைக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்தவர்கள் வடிவேலுவை எங்களிடம் அறிமுகப்படுத்தி வைத்து, “இவனை சினிமாவில் நடிக்க வையுங்களேன்..” என்றார்கள்.
அப்போது “ஏதாவது நடித்துக் காட்டு” என்று நாங்கள் சொன்னவுடன், உடனே தரையில் விழுந்து கிழிந்து புரண்டு எழுந்து நடித்துக் காட்டி, சிவாஜி வசனங்கள் எல்லாம் பேசி நடித்துக் காண்பித்தார்.
அப்போது, ராஜ்கிரண் “இந்தப் பையனுக்கு கதையில் ஏதாவது வாய்ப்பு இருக்குமா..?” என்று கேட்டார். “எழுதிரலாம்..” என்றேன்.
முதல் படத்திலேயே வடிவேலுவை கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடிக்க வைத்தேன். அந்தக் காட்சியில் நடித்து முடித்தவுடன் கவுண்டமணி என்னை அழைத்து, “யார் சார் இவன்… எங்கிருந்து புடிச்சீங்க?” என்று கேட்டார். அதே படத்தில் இன்னொரு காட்சியில் கவுண்டமணி வடிவேலுவை உதைப்பது போல் காட்சி இருந்தது. அப்போதும்,”அண்ணே இன்னொரு நாலு மிதி சேர்த்து மிதிங்கண்ணே… அப்படியாவது எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கெடைக்கட்டும்” என வடிவேலு கூறினார். அப்போது, தனக்கே மாற்றாக வரக் கூடியவர் வடிவேலு என்று கவுண்டமணிக்கே தெரியாது
வடிவேலுவிடம் ஒன்றை செய்து காட்டச் சொன்னால் ஓராயிரம் செய்து காட்டுவார். அவரே நிறைய நகைச்சுவை காட்சிகள் கூறுவார், திறமைகளின் பேரூற்று அவர். நான் இயக்கிய படங்களில் தொடர்ச்சியாக நகைச்சுவை கதாபாத்திரங்கள் கொடுத்தேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் வடிவேலு பயங்கர பிசியானதால் என்னுடைய படத்திற்கு ஷூட்டிங்கிற்கு தாமதமாக வர ஆரம்பித்தார். அப்போது வடிவேலுவை அழைத்து “நேரம் தவறாமை மிக முக்கியம். நீ பிசியாகிவிட்டதால் இனி உன்னால் படப்பிடிப்பிற்கு சரியாக வர முடியுமா என்று தெரியவில்லை. அதனால் இனி நான் உன்னை கூப்பிட மாட்டேன்” என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு இன்றுவரை என் படங்களில் வடிவேலுவை நான் நடிக்க வைக்கவில்லை.…” என்று கஸ்தூரி ராஜா அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.