தமிழ் திரைப்பட இசை உலகில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழ்பவர் சந்தோஷ் நாராயணன். திரைப்பட இசையுடன் இணைந்து சுயாதீன இசைப் பாடல்களையும் உருவாக்கி வரும் அவர், சமீபத்தில் சர்வதேச அளவிலான புதிய இசை கூட்டணியை அறிவித்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஆங்கில இசைக்கலைஞர் எட் ஷீரன், கேரளாவின் ராப் பாடகர் ஹனுமான்கைண்ட், பாடகி தீ ஆகியோருடன் இணைந்து ‘டோன்ட் லுக் டவுன்’ என்ற பாடலை உருவாக்கியுள்ளார். இதற்கு முன்பு ‘நியே ஒலி’, ‘எஞ்சாய் எஞ்சாமி’ போன்ற சுயாதீன பாடல்கள் மூலம் பெரும் வெற்றியை பெற்றிருந்தார். தீ, சந்தோஷ் இசையமைத்த ‘எஞ்சாய் எஞ்சாமி’, ‘மாமதுர்’, ‘சம்கீலா ஆங்கிலேசி’, ‘ஏ சண்டகரா’ உள்ளிட்ட பாடல்களில் குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ‘முத்த மழை’ பாடலையும் பாடியிருந்தார்.
ஹனுமான்கைண்ட் என்பவர் கேரளாவைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் (ராப்பர்). அவரது ஆல்பங்கள் உலகளவில் பிரபலமானவை. மேலும் ஆஷிக் அபுவின் ‘ரைபிள் கிளப்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர்களுடன் இணைந்த ‘டோன்ட் லுக் டவுன்’ பாடல் தற்போது வெளியிடப்பட்டு, இசை ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.