நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் மோசடி நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.
நடிகர் சூர்யா கடந்த 2013-ம் ஆண்டு சொந்தமாகத் துவங்கிய படத் தயாரிப்பு நிறுவனம் 2டி நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலமாக இதுவரையிலும் 12 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் 3 படங்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் 2டி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் போலியான ஈமெயில் முகவரியை உருவாக்கி பொதுமக்களிடம் பணம் பறிப்பதாக புகார் வந்துள்ளது. சினிமா யூனியன்களில் அடையாள அட்டை வாங்கி தருவதாகவும் கூறி சிலர் பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த 2-டி நிறுவனம் இது பற்றிய ஆதாரங்களை வெளியிட்டு, பொதுமக்கள் யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
“போலியான இணைய முகவரியை உருவாக்கி எங்களது பெயரை பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றி வந்ததை நாங்கள் அறிந்தோம். எங்களது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி ஆடிசன் மற்றும் யூனியன் கார்டு வாங்கித் தருவதாக ஏமாற்றி வருகின்றனர். 2-டி நிறுவனத்தின் சார்பாக எந்த ஒரு ஆடிசன்களும் நேரடியாக நடத்தப்படுவதில்லை.
எங்கள் நிறுவனத்தில் படம் பண்ணும் இயக்குநர்கள் நேரடியாக ஆடிசன்கள் வைப்பார்கள் மற்றும் ஆடிசன்களுக்காக எந்தக் கம்பெனியும் பணம் கேட்காது.
எங்களது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்துவதற்காக காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். மேலும் இதுபோல் போலியான நபர்களிடம் பணம் மற்றும் உங்களைப் பற்றிய தகவல்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்…” என்று 2D நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



