1944-ம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய ஒரு கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய வலைத் தொடரை சோனி லிவ் ஓடிடி தளம் உருவாக்குகிறது.
தமிழகத்தில் 1944-ம் ஆண்டு நடைபெற்ற ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ தமிழகத்தின் அரசியல் களத்திலும், தமிழ்த் திரையுலகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
‘இந்து நேசன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியரான சி.என்.லட்சுமிகாந்தன் என்னும் தமிழ் பத்திரிக்கையாளர் 1944-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று சென்னையில் வேப்பேரி பகுதியில் சைக்கிள் ரிக்சாவில் பயணித்துக் கொண்டிருந்தபோது சிலரால் கத்தியால் குத்தப்பட்டார். அடுத்த நாள் காலையில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் அப்போது தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்றிருந்த நடிகர்களான தியாகராஜ பாகவதரும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், இயக்குநர் எஸ்.எம்.ராமுலுவும் கொலை செய்யத் தூண்டியதாகச் சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு இயக்குநர் நாயுடு விடுவிக்கப்பட்டு தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் குற்றவாளிகளாக தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்திலும் இவர்களது மேல் முறையீடு தோல்வியடைந்தது.
1947-ம் ஆண்டு வரையிலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் அப்போது நாட்டின் உயரிய முறையீடு அமைப்பாக இருந்த பிரைவி கௌன்சிலுக்கு விண்ணப்பித்தனர்.
பிரைவி கௌன்சில் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கும்படி அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தது. அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரித்தபோது பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இருவரும் குற்றமற்றவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆனார்கள்.
ஆனால், இப்போதுவரையிலும் லட்சுமி காந்தனை கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இந்த வழக்கின் சுவாரஸ்யமான விஷயமாகும்.
இந்த வழக்கினால் தியாகராஜ பாகவதர் மிகவும் மனமொடிந்ததுடன் தமது பெரும் செல்வத்தையும் இழந்தார். ஒரு காலத்தில் தங்கத் தட்டிலும், வெள்ளி டம்ளரிலும் உணவருந்திய பாகவதர் தனது கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி, 1959-ம் ஆண்டு பரிதாபமாக இறந்து போனார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்பு தான் மறையும்வரையிலும் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த வழக்கு பற்றியும், இதில் அறியப்படாமல் இருக்கும் சதிகளையும், மர்மங்களையும் வெளிப்படுத்துவதுபோலவும் இந்த வலைத் தொடர் உருவாகப் போகிறது.
‘தி மெட்ராஸ் மர்டர்’ என்ற இந்த வெப் சீரிஸை சூரிய பிரதாப்.S எழுதி, இயக்குகிறார். பிரபல இயக்குநரான விஜய் இந்தத் தொடரின் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை Big Print Pictures பேனரின் கீழ் IB கார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இத்தொடரின் ஷோ ரன்னரான A.L.விஜய் இது குறித்துப் பேசும்போது, “அன்றைய சென்னை மாநகரத்தில் நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மிகவும் சவாலான ‘தி மெட்ராஸ் மர்டர்’ தொடரில் நானும் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்க, நாங்கள் முழு மூச்சுடன் உழைக்கக் காத்திருக்கிறோம். அந்தக் காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் முழு அர்ப்பணிப்புடன் நடந்து வருகிறது. டிஜிட்டல் திரையில் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தை காண காத்திருங்கள்.” என்றார்.
காத்திருப்போம்..!