1982-ம் ஆண்டு வெளிவந்து தமிழ்த் திரையுலகத்தின் போக்கையே மாற்றியமைத்த படமாக இன்றைக்கும் பேசப்படும் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் நடிப்பதற்கு முதலில் பெரிதும் தயங்கியதாக… அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு பூர்ணிமா பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில் இது குறித்துப் பேசியுள்ளார்.
“நெஞ்சில் ஒரு முள்’, ‘கிளிஞ்சல்கள்’ என்று இரண்டே இரண்டு படங்களில் நடித்திருக்கும்போதுதான் இந்தப் ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்திற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போ ‘கிளிஞ்சல்கள்’ படத்துல நடிச்சுக்கிட்டிருந்தேன்.
இந்த வாய்ப்பைக் கேட்டுட்டு முதல்ல எனக்குள்ள ஒரு தயக்கம். ஏன்னா.. முதல் பட இயக்குநர்கள் நிறைய படத்துல ‘சொதப்பிட்டாங்க’. ‘சரியா செய்யலை’.. ‘படம் பெயிலயிராயிச்சு’ என்றெல்லாம் நிறைய பேச்சுக்கள் திரையுலகத்தில் இருந்தது. இதையெல்லாம் கேட்டுத்தான் நானும் அந்தப் பட வாய்ப்பை தவிர்த்துக் கொண்டேயிருந்தேன்.
ஒரு நாள் அவர் நான்கைந்து முறை போன் செய்தார். நான் போனை அட்டெண்ட் செய்யவே இல்லை. அப்புறம் மேல் அமைச்சர்கள் சிபாரிசு.. அப்படி, இப்படின்னு நிறைய பேர் பேசினாங்க. சரின்னு கதையாவது கேக்கலாம்ன்னு நினைச்சு இயக்குநரைக் கூப்பிட்டு பேசினேன்.
அப்போ நான் பாம்குரோவ் ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஆர்.சுந்தர்ராஜன் ஸார் வந்து கதை சொன்னார். மொத்தக் கதையையும் இடைல இடைல பாட்டு வர்ற சீன்ஸ்ல எல்லாம் அந்தப் பாடல்களையே பாடிக் காட்டினார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. அவர் கதை சொன்னவிதம் எனக்குப் பிடிச்சதால சரி.. இதுல நடிப்போம்ன்னு நினைச்சுத்தான் அந்தப் படத்துக்கு ஓகே சொன்னேன்.
ஆனால் பாருங்க.. படம் அப்படியொரு ஓட்டம் ஓடிருச்சு.. சில்வர் ஜூப்ளி கொண்டாடுச்சு. சென்னைல 275 நாள் ஓடுச்சு.. சிவாஜி ஸார்தான் எங்களுக்கு விருது கொடுத்தார்..” என்று பூரிப்போடு சொல்லியிருக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ்.