அரசியல் வானில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய, 24 மணி நேரமும் தமிழக மக்களின் முன்னேற்றம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த, ஒரு ஆட்சியாளருக்கு எப்படிப்பட்ட ஒரு ஆளுமை இருக்க வேண்டும் என்று இந்த உலகத்துக்கு எடுத்துச் சொன்ன ஒரு தன்னிகரில்லாத அரசியல் தலைவிதான் தமிழக மக்கள் அம்மா என்று உள்ளன்போடு போற்றும் ஜெயலலிதா அவர்கள்.
ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் அரசியலில் காலடி எடுத்து வைத்து, தனது அயராத உழைப்பால் ஆறுமுறை தமிழக முதல்வராக முடி சூட்டிக் கொண்ட ஒப்பற்ற தலைவியான ஜெயலலிதா அவர்களை அவர் நடிகையாக இருந்த காலத்திலிருந்து நான் நன்கு அறிவேன்.
அப்போது நான் பத்திரிகையாளனாக இருந்தேன். அது தவிர, ‘திரைக்கதிர்’ என்ற பெயரிலே சொந்தமாக பத்திரிகை ஒன்றும் நடத்திக் கொண்டிருந்தேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக .அவர் நடித்த வெற்றிப் படங்களான ‘சூர்யகாந்தி’, ‘அன்பைத் தேடி’, ‘அவன்தான் மனிதன்’, ’பாக்தாத் பேரழகி’ உட்பட பல திரைப்படங்களுக்கு நான்தான் பத்திரிகைத் தொடர்பாளர்.
தமிழ்த் திரையுலகில் மிகுந்த செல்வாக்குமிக்க நடிகையாக அவர் இருந்த அந்த காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் சிலவற்றை இந்தக் கட்டுரையில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
படப்பிடிப்புத் தளத்திலே மற்ற நடிகைகளைப் போல படப்பிடிப்புக்கு நடுவே அவர் அரட்டையடித்து பேசி நான் பார்த்ததே இல்லை. தனது காட்சியில் நடித்து முடித்துவிட்டு வந்து அமர்ந்தால் என்றால் அடுத்த நிமிடமே தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆங்கிலப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிடுவார் அவர்.
அதே போன்று அவரைப் பேட்டி காண வருகின்ற பத்திரிகையாளர்களை ஒரு ராஜா மாதிரி நடத்துவார் அவர். அந்தப் பத்திரிகையாளர் மிகப் பெரிய பத்திரிகையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.. சிறிய பத்திரிகையாளராக இருந்தாலும் சரி.. அவரது உபசரிப்பு இருக்கிறதே அது மாறவே மாறாது.
அவரை பேட்டி காண வருவதாக நீங்கள் சொன்ன நேரத்துக்கு பத்து நிமிடத்துக்கு முன்னாலேயே உங்களுக்காக ஒரு நாற்காலி அவர் அருகே போடப்பட்டிருக்கும். அதே மாதிரி நீங்கள் அவர் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கிய பத்தாவது நிமிடம் காபியோ, குளிர் பானமோ உங்களைத் தேடி வரும்.
பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவராக விளங்கிய அவர் 1973-ம் ஆண்டு தனது பிறந்த நாள் விழாவை சவேரா ஓட்டலில் கொண்டாடியபோது அந்த பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட சுதேசமித்திரன் ராமமூர்த்தி, திரையுலகம் துரைராஜ், மதிஒளி சண்முகம், பிலிமாலயா வல்லபன், தினத்தந்தி அதிவீர பாண்டியன் மற்றும் நான் உட்பட பல பத்திரிகையாளர்களுக்கு ஆளுயர மாலை அணிவித்தது மட்டுமின்றி, அழகான ஒரு பார்க்கர் பேனாவையும் பரிசளித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னாலே ஒரு முக்கியமான சம்பவம் இருக்கிறது.
‘கங்கா கவுரி’ என்ற பெயரிலே பி.ஆர்.பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கிய படத்தில் ஜெயலலிதா அவர்கள்தான் நாயகி. ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூர் பிரீமியர் ஸ்டுடியோவில் நடைபெற்றபோது அந்தப் படத்தைப் பற்றி பத்தரிகைகளில் எழுதுவதற்காக சில பத்திரிகையாளர்களை அழைத்திருந்தார் பந்துலு. அவரது அழைப்பை ஏற்று நாங்கள் மைசூர் சென்றிருந்தோம்.
பகல் பத்து மணியளவில் ‘கங்கா கவுரி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பிரிமியர் ஸ்டுடியோவிற்கு சென்ற நாங்கள் படப்பிடிப்பில் ஜெமினி கணேசன் அவர்களையும் ஜெயலலிதா அவர்களையும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும்போது வெறித்தனமாக கூச்சல் போட்டுக் கொண்டு 100-க்கும் மேற்பட்டவர்கள் அந்தப் படப்பிடிப்பு தளத்தில் ஜெயலலிதா அவர்களை சூழ்ந்து கொண்டுவிட்டார்கள்.
ஒரு பத்திரிகைப் பேட்டியில் ‘நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்’ என்று ஜெயலிதா அவர்கள் கொடுத்திருந்த பேட்டியை மாற்றி ‘நான் கன்னடத்தைச் சேந்தவர்’ என்று சொல்லும்படி வற்புறுத்தி உரக்க கூச்சல் போட்ட அவர்கள் கையில் கத்தி உட்பட பல ஆயதங்கள் இருந்ததைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆகிய நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு முன்னாலே ஒரு அரண் போல நின்று கொண்டோம்.
நேரம் ஆக ஆக எந்த அசம்பாவிதம் வேண்டுமானாலும் நடக்க்கலாம் என்ற அந்த சூழ்நிலையில் கன்னட பட இயக்குநரான ரவி என்பவரும், ஜெமினி கணேசனும், இன்னும் சிலரும் “பிரச்னை மிகவும் பெரியதாகிவிடும் போலிருக்கிறது. அதனால் போனால் போகிறது… ஒரு முறை அவர்கள் சொலவது போல சொல்லி விடுங்களேன்” என்கிறார்கள். “எனக்கு என்ன நடந்தாலும் சரி இவர்களுக்குப் பயந்து உண்மைக்கு புறம்பான ஒன்றை சொல்ல மாட்டேன்…” என்று துணிச்சலோடு அவர்களை எதிர்த்து ஜெயலலிதா அவர்கள் நின்றபோது பதினாறு கரம் கொண்ட அந்த பராசக்தியை நேரில் பார்த்தது போல இருந்தது எங்களுக்கு.
எவ்வளவு போராடினாலும் அவர் அசைந்து கொடுக்க மாட்டார் எனபது தெரிந்ததும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்று விட்டனர். அதற்குப் பின்னர் அப்படி ஒரு விபரீதமான சூழ்நிலையில் அங்கே தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எம்.ஜி.ஆர்., அவர்கள் கூறிய அறிவுரையைக் கேட்டு ஜெயலலிதா அவர்கள் சென்னை திருப்பினார்.
தனது 25-வது பிறந்த நாள் விழாவினை ‘கங்கா கவுரி’ படப்பிடிப்பில் அவருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக் கூடாது என்று அவருக்கு முன்னாலே அரண் போல இருந்து காப்பற்றிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற விழாவாக மாற்றிய அவர் எங்களுக்கு நன்றி தெரிவித்து ஆளுயர மாலையை அணிவித்தது மட்டுமின்றி பார்க்கர் பேனா ஒன்றையும் பரிசளித்தார்.
அரசிலில் அவர் அடியெடுத்து வைத்த பிறகு ‘இரும்பு நிகர் பெண்மணி’ என்று பத்திரிகைகள் அவரைப் பாராட்டும்போதெல்லாம் இந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வரும்.
அநீதிகளை இரும்பு மனம் கொண்டு எதிர்க்கின்ற அவரது குணம் அரசியலுக்கு வந்ததற்குப் பிறகு அவரிடம் வந்ததல்ல. இயல்பாகவே அவரிடம் குடி கொண்டிருந்த குணம் அது.
அதே போன்று பத்திரிகைகளில் தன்னைப் பற்றி தவறாக ஒரு சிறு செய்தி வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டார் அவர். அது மட்டுமின்றி அந்த செய்தியினை அலட்சியப்படுத்தாமல் உடனே அதற்கு பதில் தருவதையும் வழக்கமாக வைத்திருந்தார் அவர்.
1980-ம் ஆண்டு ஒரு ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஜெயலலிதா சினிமா உலகில் தனது இடத்தை மீட்பதற்காக போராடுகிறார் என்ற அர்த்தம் தொனிக்கும்படியாக ஒரு கட்டுரையை எழுதிவிட்டார்.
உடனே அந்தப் பத்திரிகையாளருக்கு தன கைப்பட கடிதம் எழுதிய அவர் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு ‘பில்லா’ படத்தி;ல் ஜோடியாக நடிக்கின்ற வாய்ப்புகூட முதலில் தன்னைத்தான் தேடி வந்தது என்றும் தனிப்பட்ட சில காரணங்களால் தான் அந்த வாய்ப்பை நிராகரித்த பின்னரே அந்த வாய்ப்பு ஸ்ரீபிரியாவிற்கு கிடைத்தது என்பதையும் குறிப்பிட்டுவிட்டு இதிலிருந்தே பட வாய்ப்பு தேடி அலையும் நிலையில் நான் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்…” நறுக்குத் தெறித்ததுபோல அந்தக் கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.
நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக ஏதாவது எழுதினால்தான் எப்போதும் அவர்களிடமிருந்து எதிர்ப்பு வரும். தினமும் காலை எழுந்தவுடன் இந்த நடிகை போர்ன்விடாதான் குடிப்பார் என்றோ இந்த நடிகர் தினமும் காலையில் சாமியை கும்பிடாமல் வெளியே கிளம்ப மாட்டார் என்றோ செய்தி வெளியிட்டால் அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு ‘தஞ்சை குஞ்சிதபாதம்’ என்ற சினிமா பத்திரிகை நிருபர், “ஜெயலலிதா செவ்வாய்கிழமை அன்று விரதம் அனுஷ்டிப்பார்..” என்றும் “செவ்வாய்கிழமைகளில் அவர் மதியம் சாப்பிடவேமாட்டார்…” என்றும் ஒரு பத்திரிகையில் துண்டுச் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அந்தச் செய்தி வெளியான அடுத்த வாரம் அந்த நிருபரை சந்தித்தபோது, “ஏன் இப்படி எல்லாம் தவறான தகவல்களை எழுதுகிறீர்கள்..? நான் செவ்வாய்கிழமைகளில் ஏதாவது ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பில் வழக்கம்போல உணவு அருந்துவதைப் பார்க்கும் ரசிகர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? விரதம் இருப்பதாக சொல்லிவிட்டு சாப்பிடுவதாக தவறாக நினைக்க மாட்டாரா…? ஆகவே, எனக்கு ஆதரவாக ஏதாவது செய்தி வெளியிடுவதாக இருந்தால்கூட என்னிடம் கேட்காமல் வெளியிடாதீர்கள்…” என்று கூறினார்.
தன்னைப் பற்றி ஒரு சிறிய செய்திகூட தவறாக வந்துவிடக்கூடாது என்பதில் அவர் எந்த அளவு எச்சரிக்கையாக இருந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.
போயஸ் தோட்டத்தில் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு ‘வேதா இல்லம்’ என்று தனது அன்னையின் பெயரை சூட்டிய அவர் அந்த வீட்டிற்கு குடி புகுந்தபோது எல்லா சினிமா பத்திரிகையாளர்களையும் அழைத்தது மட்டுமின்றி அவர்கள் விருந்து சாப்பிட்டபோது கூடவே இருந்து எல்லோரரயும் கனிவாக உபசரித்தார்.
எந்த விளம்பரமும் இன்றி பத்திரிகையாளர்கள் பலருக்கு எண்ணற்ற உதவிகளை செய்திருக்கும் அவர் மறந்தும் அதைப் பற்றி எப்போதும் வெளியிலே தெரிவித்ததே இல்லை.
நடிகை என்ற அந்தஸ்திலிருந்து அரசியலில் அடியெடுத்து வைத்து தமிழ் நாட்டின் தனிப் பெரும் சக்தியாக உருவாகி கோடான கோடி மக்கள் ‘அம்மா’ என்று அழைக்கின்ற நிலைக்கு வந்த பின்பும், இந்த தனிப்பட்ட குணங்கள் தன்னிடமிருந்து விலகாமல் பார்த்துக் கொண்ட தங்க மகளாக அவர் இருந்தார்.
‘எந்த சந்தர்ப்பத்தில் இரும்பாக இருக்க வேண்டும்’; ‘எந்த சந்தர்ப்பத்தில் கரும்பாக இருக்க வேண்டும்’ என்பதை பூரணமாக உணர்ந்திருந்தது மட்டுமின்றி அப்படியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஈடு இணையற்ற தலைவியாக அவர் விளங்கியதால்தான் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு இன்று மொத்த இந்தியாவும் கண்ணீர் விடுகிறது.
இந்திய அரசியல் இன்னும் பல பெண் முதலமைச்சர்களை சந்திக்கலாம். ஆனால் ஆட்சித் திறனில் ஜெயலலிதாவிற்கு நிகரான ஒரு தலைவியை மீண்டும் சந்திக்குமா என்பது பதில் இல்லாத ஒரு கேள்விதான்.